பக்கம்:சுயம்வரம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

79

"பூரி என்றும் சொல்ல முடியாது, அவளை..."

"வேறு என்னவென்று வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போ! ஐ டோண்ட் மைன்ட் முடிந்தால், வசதி இருந்தால் ஒவ்வொரு நாளும் அவள் எனக்குப் புதுசாயிருக்க வேண்டும்; அவ்வளவுதான்!"

"மற்றவர்களுக்கு அவள் பழசாயிருந்தால் பாதகம் இல்லை , அப்படித்தானே?"

"ஏன் பழசாயிருக்கிறாள்? என்னை நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லை, பிரதர்! அதான் சொன்னேனே, அது ஒரு 'எக்ஸ்சேஞ்ஜ் பிசினஸ்' மாதிரி நடக்க வேண்டும். நேற்று எனக்குப் புதுசாயிருந்தவள், இன்று உனக்குப் புதுசு; எனக்குப் பழசு. அதே மாதிரி, இன்று உனக்குப் புதுசாயிருப்பவள், நாளை எனக்குப் புதுசு; உனக்குப் பழசு. ஆஹா! இந்த 'ஆனந்தன் வழி'யை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்! பிள்ளை , குட்டி, படிப்பு, உத்தியோகம், கலியாணம், வீடு, வாசல் என்று ஒரு பிக்கல் இருக்குமா? ஒரு பிடுங்கல் இருக்குமா?"

"இருக்காது அப்பனே, இருக்காது."

"உதாரணத்துக்காக உன்னைத்தான் எடுத்துக் கொள்ளேன்! நீ மதனாவைக் காதலித்தாய்; அதோடு நின்றாயா? அவளைக் கலியாணமும் செய்து கொண்டாய். பிடித்தது சனியன்! இனி அவள் உனக்குத்தான் சொந்தம் என்று நீ உரிமை கொண்டாடுவாய்; இனி நீ தனக்குத்தான் சொந்தம் என்று அவள் உரிமை கொண்டாடுவாள். இந்த சொந்தத்திலிருந்து பந்தம் முளைக்கும்; பாசம் முளைக்கும், அப்புறம் பிள்ளை , குட்டி எல்லாம் முளைக்கும். பிடுங்கல், பிடுங்கல், ஒரே பிடுங்கல்! அதோ, போகிறார்கள் பார். இரண்டு பெண்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/82&oldid=1384752" இலிருந்து மீள்விக்கப்பட்டது