பக்கம்:சுயம்வரம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சுயம்வரம்


இல்லை; அவனாகவே இங்கு வருவதாயிருந்தால்கூட அவள் அதற்கு ஏதாவது ஒரு முட்டுக்கட்டை போட்டுவிட்டு வருவாள். எனக்குத் தெரியாதா, அவளை? அவளுக்கும் அவனிடம் ஏதோ ஒரு மயக்கம்; எல்லாம் விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுந்து மடியத் துடிக்கும் கதைதான். அந்த விட்டில் பூச்சிகளில் ஒன்றாக நீயும் ஆகிவிடாதே! அதை என்னால் தாங்கவே முடியாது. வா, என்னுடன்; இப்போதே வா!" என்று அவன் துணிந்து அவள் கரத்தைப் பற்றப் போக, அவனுடைய கைக்குக் கிடைத்தது ஒரு போலீஸ்காரரின் இரும்புக் கையாயிருக்கவே, அவன் திடுக்கிட்டு, "யார் நீங்கள்?" என்றான் ஒன்றும் புரியாமல்.

"அதே கேள்வியைத்தான் நானும் உங்களைக் கேட்க வேண்டுமென்று இங்கே வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு, "உங்கள் பெயர்?" என்று கேட்டார் போலீஸ்காரர்.

"ஆனந்தன்."

"ஆனந்தனா!" என்று சொல்லிக்கொண்டே, அவர் தம் சட்டைப்பையிலிருந்த ஏதோ ஒரு குறிப்பை எடுத்துப் பார்த்து விட்டு, "இல்லையே, அவர் பெயர் ஆபிரகாம் லிங்கன் என்று அல்லவா இருக்கிறது?" என்று தலையைச் சொறிந்தார்.

"பாவம், அவரைத்தான் எப்போதோ அமெரிக்காவில் சுட்டுக் கொன்றுவிட்டார்களே, சார்" என்றான் ஆனந்தன்.

"அது எனக்குத் தெரியாதா? இந்த ஆபிரகாம் லிங்கனுக்கு புத்தி சுவாதீனமில்லையாம்; கண்ட இடத்தில் நின்று தனக்குத் தானே ஏதாவது உளறிக்கொண்டே இருப்பாராம். இரண்டு நாட்களுக்கு முன்னால் ராயப்பேட்டையிலிருந்து இவர் காணாமற் போய்விட்டாராம். சம்பந்தப்பட்டவர்கள் செய்து கொண்ட விண்ணப்பத்தின் பேரில் இப்போது நாங்கள் அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/97&oldid=1384818" இலிருந்து மீள்விக்கப்பட்டது