பக்கம்:சுலபா.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சுலபா

மயக்கம்-தலை சுற்றியது. இன்னும் எழுதமாட்டார்களா என்று எதிர்பார்க்கத் தோன்றியது அன்று. இன்றோ மரத்துப் போய்விட்டது. படிக்கப் படிக்க வெறுப்பூட்டியது.

     முதலில் பிடித்தவனையே தொடர்ந்து பிடிப்பதாலோ என்னவோ புகழும் ஒரு தொற்று நோயாகவே இருப்பது புரிந்தது. 'எபிடமிக்' என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அப்படி ஒரே சமயத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களைப் பீடிக்கும் கொள்ளை நோய் வகைகளில் முதன்மையானது "புகழ்' என்று அவள் எண்ணினாள். ஒருத்தரைப் பிடித்துப் பேய்ப் புகழ ஆரம்பித்தால் கும்பல் கும்பலாகச் சேர்ந்து கொண்டு வந்து புகழ்ந்து தீர்க்கிறார்கள். உதாசீனம் செய்யத் தொடங்கினாலும் அப்படித்தான். வெகுஜனங்களின் உடல் நிலையைப் பாதிக்காமலே அவர்களையும், அவர்களால் புகழப்படுகிறவர்களையும் அவ்வப்போது, பாதிக்கும் நோய்களில் புகழும் பழியும் முக்கியமானவையாயிருந்தன. ஓர் ஆடு போகிற திசையில் கண்களை மூடிக் கொண்டு பின்னால் போகும் ஆட்டு மந்தையைப் போல முதல் நபர் புகழ ஆரமபித்த ஆளை மூச்சு முட்டும்படி புகழ்ந்துகொண்டே இருககிறார்கள். அடுத்த ஆள் கிடைத்தவுடனை முந்திய ஆளை விட்டுவிடுகிறார்கள், புதிய ஆளைப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்புறம் அந்தப் புதிய ஆள் மாட்டிக் கொள்கிறான்.
     அதிகப் பணமும், வசதிகளும், மரியாதையும் வருகிறவரை ஒவ்வொரு படியாகக் கால் ஊன்றி நடந்து நிதானமாக மேலே ஏற வேண்டியிருக்கிறது. பணம், வசதி, மரியாதை எல்லாம் வந்தபின், விநாடியில் ஐந்து மாடிகளுக்குத் தூக்கிக் கொண்டு போக முடிந்த அசுர வேகமுள்ள லிஃப்ட் கிடைத்து விடுகிறது. லிஃப்ட்டில் ஏறியபின் மேலே போகச் சிரமப்படி வேண்டிய அவசியமே இல்லை. ஏறி நிற்க இடம் கிடைத்தால் போக விரும்பிய உயரத்திற்குப் போய்க்கொண்டே இருக்கிறது, லிஃப்ட் நாமாக நிறுத்த முயன்றாலொழிய அது தானாக நிற்பதில்லை; நிறுத்தப்படுவதுமில்லை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/8&oldid=1227732" இலிருந்து மீள்விக்கப்பட்டது