பக்கம்:சுலபா.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

7
      வாழ்வில் கடந்த ஒருடஜன் வருஷங்களாகப் 'பிரேக்டவுன்' ஆகாத ஒரு லிஃப்ட்டில் சுலபா இருக்கிறாள். அதுபாட்டுக்கு மேலே மேலே போய்க் கொண்டே இருக்கிறது. நிற்கவில்லை, மேலே போவது சலிப்பூட்டி வெறுப்பூட்டி எங்காவது அந்தரத்தில் 'நின்று தொலைத்தால் கூடத் தேவலையே, என்று அவளே நினைக்கிற அளவுக்குப் போரடிக்கிற வேகத்தில் அது மேலே மேலே போய்க்கொண்டிருந்தது. நின்றாலும் பிடிப்பதில்லை, நிற்காமலே போய்க்கொண்டிருப்பதும் பிடிப்பதில்லை; வாழ்க்கையே வேடிக்கைதான். ஓடினால் நிற்க ஆசையாயிருக்கிறது. நின்றால் ஓட ஆசையாயிருக்கிறது. ஓடிக்கொண்டே நிற்க முடிவதில்லை. நின்று கொண்டே ஓட முடிவதில்லை. ஏதாவது ஒன்றைத்தான் செய்ய முடிகிறது. இரண்டும் செய்ய இயல்வதில்லை;
      தலைதெறிக்கிற வேகத்தில் ஒடிக்கொன்டிருக்கிறபோது திடுதிப்பென்று நிற்க முயல்வது கூட ஆபத்தானது. வேகத்துக்கு ரோஷம் அதிகம். தன்னிலிருந்து விலகி ஐந்தாம் படையாகிறவனைத் தடுமாறிக் கீழே வீழ்த்திவிட்டுத்தான் அது மேலே நகரும்? 


      வேகத்திலிருந்து விலகி நின்றுவிட முயலும் போதெல்லாம் குமாரி சுலபா தடுமாறியிருக்கிறாள், தாகத்தால் தவித்து வந்தவருக்கு முதல் நாலைந்து மடக்குத் தண்ணிரைப் பருகுவதுபோல் தொடக்கத்தில் சிலஆண்டுகள் இந்தப் பணம், வசதிகள், புகழ்,எல்லாமே பிடித்திருந்தன அவளுக்கு,
      "தென்றலே! தேனே! என் கனவுகளில் எல்லாம் நீயே வருகிறாய்! உன்னைக் கனவுகளில் காணும் போதெல்லாம். அப்படியே வாரியணைத்துக் கண்ணாடிக் கன்னத்தில் ஓர் 'இச்' பதித்து..."...என்று விடலைத்தனமாக எழுதும் நமைச்சல் எடுத்த ஓர் இளம் இரசிகனின் 'ஏ' ரகக்கடிதங்கள் கூட, அவளுள் கிளுகிளுப்பை ஊட்டிக் கிளரச் செய்த காலங்கள் உண்டு. அந்த வேளைகளில் எல்லாம் லிஃப்ட்டில், காரில், விமானத்தில் படுவேகமாகப் போகிற ஓர் உல்லாச உணர்வை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/9&oldid=1227742" இலிருந்து மீள்விக்கப்பட்டது