பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

55


ஒரு முதிய தமிழ்ப் பெண்மணி, வயசான தன் கணவா அவர்களைப் போலவே தோற்றமளிக்கும் பெட்டியுடனும் பையுடனும் நிற்கிறார்கள்.

“ஏம்மா, தமிழ் போல இருக்கியே? தமிழர்தானே? இது ஹரித்துவாரம் போறதா?”

“ஆமாம், போகும், வாங்கோ...”

முதியவரின் கைப்பெட்டியை வாங்கிக் கொண்டு பஸ்ளில் ஏறச் சொல்கிறாள், பெரியவருக்குக் கண் பார்வை துல்லிய மில்லை போலிருக்கிறது. அவரையும் ஏற்றி விடுகிறார்கள். வசதியாக ஒரு மூன்று பேர் இருக்கையில் அமர்ந்து கொள்கின்றனர்.

“நீயும் அங்கதான் போறியாம்மா? ஆமாம் நீங்க எங்கேருந்து வராப்பல...?”

“நாங்க மதுரைப்பக்கம், கிராமம்...டில்லிக்கு வந்து அஞ்சு நாளாயிட்டது. தூரத்து உறவுகாரப் பையன் கரோல் பாலெ இருக்கான். கொண்டு ஏத்திவிட்ணும்னா, ஆபீசில லீவு கிடைக்கல. ஆட்டோ வச்சிட்டுப் போங்கோ. அவனே பஸ் நிறுத்தத்துல கொண்டு விட்டுடுவான். ஹரித்துவாரத்துக்கு அரை மணிக்கொரு பஸ் போறது, சிரமமில்லைன்னு சொன்னான். நாம்ப கேட்டா யார் லட்சியம் பண்ணிச் சொல்றா? இந்த பஸ் போகும்ன்னா, ஆனா இங்கிலீஷில வேற என்னவோன்னா போட்டிருக்கு? எச் எழுத்தில்லையே, இந்தி படிக்கத் தெரியாது...நல்ல வேளை, நீ தமிழ் பேசற வளாக் கிடைச்சே...ஏதோ ஸ்வாமி இருக்கார்!” அம்மாள் பொரிந்து தள்ளுகிறார்.

பருமனும் வெள்ளை மஸ்லின் சேலைக்கட்டுமாக, குஜராத்திப் பெண்கள், ஆண்கள், முக்காடும், முன்வகிற்றுக் குங்குமக் கீற்றுமாக உத்தர்ப்பிரதேசத்துப் பெண்கள், உச்சியில் குடுமி இழைகள் தனித்து இலங்க, கிராமத்து ஆடவர், குழந்தைகள் என்று பஸ் நிறைந்து விடுகிறது.