பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நின்று தளராது. நிமிர்ந்து வளரும்
பனைமரத் திற்குப் பலபெய ருண்டு !

மரங்கொல் தச்சரும், மலைக்குகைச் சித்தரும்,
தடித்த பனையைத் ’தால'மென் றழைத்தனர்.
புலவர்கள் அதனைப் ‘புற்பதி’ என்றனர்.
கொக்கோகக் கவிஞர்கள் கூந்தற் பனைக்குப்
பெண்ணை என்றே பெயரிட லாயினர்.

குருத்தோலைப் பனைமரம் கூட்டம் கூட்டமாய்
ஆற்றங் கரையின் அருகில் வளர்ந்ததால்
‘வடபெண்ணை’ என்றும், ‘தென்பெண்ணை’ என்றும்,
பேராறு கட்குப் பெயரிட லாயினர்.

தங்கத்தால் இன்றுநாம் தாலி செய்கிறோம்.
பண்டைய நாளிலோ பழம்படு பனையின்
ஓலையைக் கொண்டே தாலிசெய் தார்களாம்.