பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உலகில் முதன் முதலாகச் சிறந்த முறையில் சமையல் தொழில் தொடங்கியதும் அதற்குச் சீரகத்தைப் பயன்படுத்தியதும் தமிழகமே! என்பதற்குச் சான்றுகள் பல உள. "சிறுபிள்ளை இல்லா வீடும், சீரகம் இல்லாத கறியும் செவ்வையாயிரா” என்பது தொன்று தொட்டுவரும் பழமொழி. சீரகக்கோரை, சீரகச்சம்பா, சீரகவள்ளி என்பன ஒப்புமை பற்றிப் பெயர்பெற்ற நிலைத் திணை வகைகள், பொன்னளவையிற் சீரகம் என்பது ஓர் அளவு, 5 கடுகு = 1 சீரகம்; 5 சீரகம் = 1 நெல் “அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி உளவெனப் பட்ட வொன்பதிற்றெழுத்தே அவைதாம் கசதப வென்றா நமவ வென்றா அகர உகரமோ டவையென மொழிப” (தொல்.எழுத். 170) என்னும் தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா உரையில் கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை என்று இளம்பூரணரும், 'கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை, இவை நிறை' என்று நச்சினார்க்கினியரும் கூறியிருத்தலையும் நோக்குக. செரி - செரியகம் - சீரகம் என்றுமாம். வடவர் மூலம் காட்டும் வகை. ஜீரக - ஜீரண; ஜ்ரு - ஜீரண, ஜ்ரூ - கிழமாக்கு, கட்டுக்குலை, கரை, செரிக்கச் செய். ஜ்ரூ என்பது கிழ என்னும் தென்சொற்றிரிபே (வ. மொ. வ.153). அடுத்து, மூன்றாம் தொகுதியில் (செ- சௌ) ‘செம்பியன்' என்ற சொல்லின் பொருள் விளக்கம் சிறப்புடையதாயிருக்கின்றது. அதைப்போலச் 'செஞ்சம்' என்ற சொல்லுக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள் விளக்கமும் சிறப்பாயுள்ளது. செஞ்சு - செம்மை, செவ்வை, நிறைவு, செஞ்சு - செஞ்சம். அடுத்து, 'த'கர மடலத்தின் முதற் தொகுதியில் (த, தா) 'தமிழ்' என்ற சொல்லுக்குக் காட்டப்பெற்றிருக்கும் விளக்கம் விரிவானதாகவும் பொருத்தமானதாகவும் நுட்பமானதாகவும் அமைந்துள்ளது. அதைப்போலத் 'தா' என்னும் சொல்லுக்கும் அருமையான விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, 'தா' என்ற சொல் தந்தை என்பதனையும் குறிக்கும் என்று நிறுவியிருப்பது ஆராய்ச்சியாளரின் சான்றாண்மையைக் காட்டுகிறது.