பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 6, PART 1, ப,பா.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Il 2 // பொத்தகம் என்ற சொல்லுக்கு பொரு – பொருத்து - பொருத்தகம் – பொத்தகம் என்று பாவாணர் நெறிப்படி சொற்பிறப்பியல் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொருள் என்ற சொல்லுக்கு 27 வகையான பொருள் விளக்கங்களும் மேற்கோள்களும் காட்டப்பட்டுள்ளன. பொறி என்ற சொல்லுக்கு 32 வகையான பொருள் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து, 'பேறு' என்ற சொல்லுக்கு 14 வகைப் பொருள் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பேறு என்னும் சொல் புகல், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகிய பதினாறு வகைப்பட்ட செல்வங்களைக் குறிப்பதையும் காணலாம். போதல் என்ற சொல்லுக்கு மட்டும் 27 வகை நேர்வினைப் பொருள்களும், துணை வினைப் பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பியம். தமிழிலும் பலசொற்களைக் 'கண்ட அல்லது கேட்டமட்டில் அவற்றின் வேர்ப்பொருளைக் காணமுடியாது. சில சொற்களில் விளங்கித் தோன்றும்; சிலவற்றில் மறைந்து நிற்கும். மறைந்து நிற்பவற்றை ஆய்ந்து காண வேண்டும். அதனால் தான் “மொழிப் பொருட்காரணம் விழிப்பத் தோன்றா” என்றார் தொல்காப்பியர். தமிழ் வரலாற்றையும், தமிழர் வரலாற்றையும் ஆழ்ந்தாய்ந்து தமிழ் மொழியே உலகின் முதன்மொழி என்று நிறுவிக் காட்டிய பாவாணரின் தமிழ்த் தொண்டு என்றென்றும் போற்றப்பெறும் என்பதில் ஐயமில்லை. பேரகரமுதலி எஞ்சிய பகுதிகள் யாவும் திட்டமிட்டவாறு வெளிவருதற்குச் செயலூக்கம் அளித்துவரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இத்துறையின் பொறுப்பு இயக்குநர் என்ற முறையில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின் வண்ணம் நல்லாதரவு நல்கும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கும் மேலான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூல் வெளிவர அயராதுழைத்த தொகுப்பாளர் (பகுதிப் பொறுப்பாளர்), பதிப்பாசிரியர்கள், உதவிப் பதிப்பாசிரியர்கள் மற்றும் திட்டப் பணியாளர்கள் | அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நூலினை நல்ல முறையில் அச்சிட்டுத் தந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை -07-2005 (பு.ஏ. இராமையா)