இவ்வகை முறையில் அமைந்துள்ளதற்கு அருஞ்சொல் அகராதி என்று பெயர் இங்ஙனமன்றி, ஒரு நூலிலுள்ள முக்கிய சொற்களை அல்லது பொருட்கூறுகளைத் தொகுத்து அவற்றை அகர வரிசைப்படுத்தி, அவற்றின் கீழ், அவை பயின்றுள்ள தொடர்களையும் இடங்களையும் தருவது பிறிதொருவகை அகராதி இதனை ஆங்கிலத்தில் கங்கார்டன்ஸ் என்பர்
சொற்களைப் பற்றியது சொற் கோவை-அகராதி எனவும், பொருட் கூறுகளைப் பற்றியது பொருட் கோவை-அகராதி எனவும் கூறத்தகும் திருக்குறள் முதலிய தலைசிறந்த நூல்களுக்கு இவ்வகை அகராதிகள் இயற்றல் பெரும் பயன் அளிக்க வல்லது மேற்குறித்த அகராதி வகைகளேயன்றி, கலை முதலிய அறிவுத் துறைகள் பற்றிய சொற்களை முறைப்படுத்தி அருஞ்சொற்களை விளக்குவதும் ஒருவகை அகராதியாகும் இதனை அறிவுத்துறை அருஞ்சொல் விளக்க அகராதி என்னலாம்
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்குமுன் அசிரிய மக்கள் அகராதி இயற்றியதாகக் கூறப்படினும் அகராதி வகுக்கும் முறை மேனாட்டிலும் இந்நாட்டிலும் மெதுவாக வளர்ந்து வந்துள்ளது கிரேக்கர்களும் ரோமர்களும் கடின சொற்களுக்கும் அரிய சொற்களுக்கும் அருஞ்சொல் விளக்கங்கள் மட்டுமே இயற்றினர் இதுபோலவேதான் இந்தியாவிலும் வட மொழிச் சொற்களுக்குப் பொருள்விளக்க நூல் இயற்றி வந்தனர் இத்தகைய நூலை நிகண்டு என்று கூறுவர்
இம்முறையே மேனாடுகளில் பதினேழாம் நூற்றாண்டு வரை கையாளப்பட்டு வந்தது அங்கு முதன்முதலாக அகராதி தோன்றியது இத்தாலிய மொழியில் 1612-இல் ஆகும் இம்முறை பின்னர் நன்கு வளர்ந்து இப்போது இந்நாடுகளில் சிறந்த அகராதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன