பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

📖 புலவர் த. கோவேந்தன்

11

அகராக்கு இணையாகப் பயன்படும் நூல்களை உரிச் சொற் பனுவல் என முற்காலத்தில் தமிழில் வழங்கினர் இப்பெயர், இச்சொல் ஒவ்வொரு பொருட்கு உரித்து, இச்சொல் பல பொருட்கு உரித்து என்று உணர்த்து தலால் தோன்றியது தொல்காப்பியரும் சில சொற்களுக்குப் பொருள் விளக்கஞ் செய்துள்ள பகுதியை உரியியல் என்று பெயரிட்டனர். ஆனால், இப்பெயர் காலப் போக்கில் மறைந்துவிட்டது வட மொழிப் பெயராகிய நிகண்டு என்பதே தமிழிலும் நிலைத்துவிட்டது நிகண்டு என்பதற்குத் தொகுதி என்று பொருள் தெய்வப் பெயர்த் தொகுதி, மக்கட் பெயர்த் தொகுதி முதலியனவாகச் சொற்களைத் தொகுதி தொகுதியாகப் பிரித்துக் கூறுதலால் இப் பெயர் தோன்றியது இப் பெயருள்ள ஒரு பகுதி வேதத்தின் அருவகை அங்கங்களுள் நிருத்தத்தில் அடங்கிய தென்பதும் இங்கே அறியுத்தக்கது

இந்நிகண்டுகள் கடின பதங்களுக்கு மாத்திரம் பொருள் கூறின. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா என்பது தொல்காப்பியம் அன்றியும் ஆன்றோராட்சியில் வந்த செஞ்சொற்களை நிரலே கொடுத்து, அவற்றை விளக்குதலும் நிகண்டுகளின் நோக்கமாய் அமைந்தது 'வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே' என்று தொல்காப்பியம் கூறுவது இதனை வலியுறுத்தும் சொற்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, அவை வழங்கு முறை இவ்வாறு என்பதைத் துணிதலும் இந்நிகண்டுகளின் பிறிதொரு நோக்கம்

நிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகராதி இப்பெயர் முதன்முதலிற் காணப்படுவது கி பி 1594-இல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயரிலேயாகும் இதன் ஆசிரியர் சிதம்பர ரேவன சித்தர் என்னும் வீரசைவப் புலவர் இவர் இட்ட பெயரே, இப்பொழுது டிக்ஷனரி என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்து விட்டது