உரிச்சொல் நிகண்டு என்ற நூற்பெயரில் இந்த இரண்டு பெயர் வடிவங்களையும் காணலாம்.
கால அடைவில் நோக்குமிடத்துச் சொற்பொருள் உணர்த்தும் மரபைத் தோற்றுவித்தவர் ஆசிரியர் தொல்காப்பியனாரேயாவர் என்று தெரியவருகிறது. இவர் இயற்றிய பெருநூலாகிய தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திலே உரிச்சொல்லியலில் உரிச்சொற்கள் பலவற்றின் பொருளை விளக்கி உரைத்துள்ளார். உரிச்சொல்லியலிற் போலவே, பொருளதிகாரத்தின் இறுதியில் அமைந்த மரபியலிலும், விலங்கு, பறவை முதலியவற்றின் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் முதலிய மரபுப் பெயர்களைக் கூறியுள்ள பகுதியும் சொற்பொருள் உணர்த்தும் நிகண்டுகளின் தோற்றத்திற்கு வித்தாய் அமைந்ததொன்றாகும். இங்ஙனமாகத் தொல்காப்பியர்தாம் சொற்பொருள் உணர்த்தும் முறைக்கு முதல் வழிகாட்டியாகின்றார். தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்தான் நிகண்டு நூல்கள் தமிழ் மொழியில் தோன்றலாயின.
இப்பொழுதுள்ள நிகண்டு நூல்களில் பழமையானவை திவாகரம், பிங்கலம் என்ற இரண்டுமே. இவை இடைக்கால நூல்கள். இவற்றுள் திவாகரம் கி. பி. 8ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகலாம் எனச் சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் மேற்குறித்தன இரண்டும் கி. பி. சுமார் 11ஆம் நூற்றாண்டளவில் தோன்றியனவாகலாம். என்பர். இவற்றிற்கு முன் நிகண்டு நூல்கள் தோன்றி வழங்கி வந்தனவா என்று திட்டவட்டமாகக் கூறுதற்கு உரிய சான்று யாதொன்றும் புலப்படவில்லை.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையின் 382ஆம் பாடலைப் பாடியவர் ‘நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார்’ என்று குறிப்பிடுகிறார். இறையனாரகப்பொருள் உரையாசிரியரும், நன்னூலின் பழைய உரையாசிரியராகிய