பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

செந்தமிழ் பெட்டகம்

காணப்படுவதால், இந்நூல் அதனைப் பின்பற்றியதாகலாம் எனச் சிலர் கருதுகின்றனர்

கி பி பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவரென ஆராய்ச்சியாளராற் கருதப்படும் நச்சினார்கினியர் தொல்காப்பியத்திற்கும், பத்துப் பாட்டிற்கும், கலித்தொகைக்கும், குறுந்தொகையுள் பேராசிரியர் உரையெழுதாது விட்ட இருபது செய்யுளுக்கும் விருந்தியுரை எழுதியவராவர் அப்பெரியார் சிந்தாமணியின் சிறப்பினை உணர்ந்து, அதற்குச் சிறந்த முறையில் உரை செய்ய விரும்பினார்; சமண சமயக் கருத்துகள் அந்நூலில் மிகுந்திருப்பதை அறிந்தார்; அதனால், சமண சமயப் புலமை நிரம்பிய பெருமக்களையடுத்து, அச்சமய உண்மைகளைக் கேட்டறிந்து, பின்னர் நூல் முழுவதை யும் நன்கு ஆராய்ந்து, அதற்குச் சிறந்த உரை வகுத்தார் என்பார்

சிந்தாமணிக்குப் பழைய உரையொன்றும் இருந்திருக்கவேண்டுமென்பது, நச்சினார்க்கினியர் தம் உரையில் சிற்சில இடங்களில் வேறு உரையைச் சுட்டிக் காட்டி, என்பாருமுளர், என்றும் உரைப்பார், ஒரு சொல்லாக்கியும் உரைப்ப; வீந்தாரென்றல் பொருந்தாமை உணர்க என்னுந் தொடர்களைக் கூறுவதால் புலப்படும்

பெயர் பெற்ற உரையாசிரியர் பலர் தாமியற்றிய உரைகளில் சிந்தாமணியிலிருந்து மேற்கோள்களை எடுத்தாண்டுள்ளனர்

கவிச்சக்கரவர்த்தியார் எனப் பலராலும் போற்றப்படும் கம்பர் தாம் இயற்றிய இராமாயணம் பல்லாற்றலும் சிறந்து விளங்குவதற்குக் காரணம், தாம் சிந்தாமணி என்னும் அட்சய பாத்திரத்திலிருந்து ஓர் அகப்பை முகந்து கொண்டதே எனக் கூறியதாகக் கன்னபரம்பரைச்செய்தியொன்று வழங்கிவருகின்றது இவ்வழக்கை மெய்ப்பிக்கப்போதிய அகச்சான்றுகளைக் கம்பராமாயணத்திற் காணலாம்