பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

283

தாசிபாடியது' என்னும் தலைப்பில், கம்பன் பிறந்தவூர் அழுந்தூர்’ எனவரும் தனிப்பாடலாலும் இது தெளிவுறும் ஆமருவியப்பன் திருக்கோயிலுள், கம்பருக்கு ஒரு சிறு கோயில் உண்டு காலஞ்சென்ற செல்வக்கேசவராய முதலியார் தாம் எழுதிய கம்பர் என்ற நூலில் அமைத்திருப்பதும் இப்படிமமே இவ்வுருவுடன் இணைந்துள்ள ஒரு பெண் படிமமும் இங்க உண்டு இது, அவர் தம் காதற்கரிய திருவொற்றியூர் வள்ளி என்பாளது திருவுருவம் ஆகும் என்று தமிழ் நாவலர் சரிதைப் (80,81,84) பாடல்களால் ஊகிக்கப்படுகிறது இது தவிர, இவ்வூரில் கம்பர் மேடு என வழங்கும் ஓர் இடமும் உண்டு இது கம்பர் தங்கி வாழ்ந்திருந்த இடம் என்கின்றனர்

வரலாறு :

உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி என்னும் சோழன் இவ் அழுந்தூர் வேளின் மகளை மணம் புரிந்துகொண்டவனென்பது, தொல்காப்பியம் அகத்திணையியல் 30 ஆம் நூற்பாவில், நச்சினார்கினியர் உரையால் அறியலாகிறது

சோழன் கரிகாற் பெருவளத்தான் இவ் இளஞ்சேட் சென்னியின் புதல்வனாவான் “உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்” எனப் பொருநர் ஆற்றுப்படை (130) கூறும் இவன், தஞ்சை நீடாமங்கலத்துக்கு அருகில் உள்ளதாகிய வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்து நேர்ந்த பெரும்போர் ஒன்றில், ஏனை இருபெரு வேந்தரோடு, பதினெரு குறுநிலமன்னவரையும் புறங்கண்டு வென்றான், அவ்வெற்றியைப் பாராட்டித் திருவழுந்தூரினர் (அவன் மாமன் முதலோர்) ஒரு பெருங்கொண்டாட்டம் கொண்டாடினர் என்றும், அதன் பெரிய ஆரவாரம் வெகுதூரம் பரவியதென்றும், அகநானூறு 246 ஆம் செய்யுள் கூறுகிறது