பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

செந்தமிழ் பெட்டகம்


எழுதியிருக்கக் கூடும் என்று ஊகிக்கப்படும் நான்கு சீரிய அழகு வாய்ந்த பாணங்கள் அகப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சூத்திரகன் எழுதியதாகக் கருதப்படும் பதும பிராப்பிருதகம் நகைச்சுவை, சொற்சுவை ததும்பியிருக்கும். இதன் நடையைப் பார்த்தால் மிருச்சகடிகம் எழுதியவரே இதையும் எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றும். மற்றவை ஈசுவரதத்தர் எழுதிய தூர்த்த விடசம்வாதம், வரருசி எழுதிய உபயாபிசாரிகை, சியாமிளகன் எழுதிய பாத தாடிதகம் என்பவை.

இவற்றிற்குப் பிறகு இடைக்காலத்தில் பானங்கள் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. பிற்காலத்தில் தென்னிந்தியாவில் அதிலும் சிறப்பாகத் தமிழகத்தில் தஞ்சையில் பல பாணங்கள் இயற்றப்பட்டன.இவற்றில் சிலவற்றின் பெயர்களை மட்டும் குறிக்கலாம். ஆந்திர நாட்டில் வாமனபட்ட பாணன் எழுதிய சிருங்கார பூஷணம் (கி.பி.1400), மைசூரில் காசிபதி எழுதிய முகுந்தா நந்தம் (18 ம் நூ. ), கேரளத்தில் கோடிலாங்கபுரத்து யுவராஜன் எழுதிய ரசசதனம், தமிழ் நாட்டில் காஞ்சியில் வரதாசாரியர் எழுதிய வசந்த திலகம், தஞ்சையில் ராமபத்திர தீட்சிதர் செய்த சிருங்கார திலகம், நல்லா தீட்சிதரின் சிருங்கார ஸர்வஸ்வம் முதலியன அவை.

உபரூபகங்கள் : பரதர் தம் முதல் நூலில் பதினொரு நாடக வகைகளைக் கூறினார். அவற்றில் அடங்காதனவும், மக்களுக்கிடையே வழங்கி வந்தனவும், பாட்டும் ஆட்டமும் நிரம்பிய சிறப்புடையனவுமான பல கூத்து வகைகள் இருந்தன. இவற்றில் பலவற்றைக் கவிகள் கையாண்டு, சீரிய இலக்கியத்தையும், பிறரால் பிற இடங்களில் கையாளும்படி இலக்கண வரையறையையும் உண்டாக்கினர். இவற்றை நாட்டிய சாஸ்திரங்களில் சேர்த்துப் பழைய பதினொரு வகை ரூபகங்களுக்கு அடுத்தாற் போல் உபரூபகமெனப் பெயரிட்டு, இவற்றின் இலக்கணத்தை முதன் முதல் வகுத்தவர் கோஹளர் என்ற ஆசிரியர்.