பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

செந்தமிழ் பெட்டகம்


தோய் தன் குழந்தைகளிடையே உயர்வு தாழ்வு பாராட்டுவாளா? பிறருடைய நன்மை தீமை இரண்டையும் தனதாக ஏற்றுக் கொண்டு, அவர் நிலையைப் பரிவுடன் பார்க்கும் தாயுள்ளமே ஏற்புத் திறன் என்ற கவிதைப் பண்பு ஆகும். தாய் பரிகாரம் தேடப் பார்ப்பாள். கவியோ பிறர் நிலையைப் கண்டு, அவர் உணர்வைக் கற்பனை செய்து உணர்த்துவதோடு நின்று விடுவான்; பரிகாரம் தேட மாட்டான்.

கவி பகுத்தறிவைப் பெரிதாக்காமல், கற்பனையை நம்பி வாழ்பவன், கற்பனை என்பது இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் எண்ணும் பொறுப்பற்ற விளையாட்டன்று. உள்ளதை உள்ளபடி, ஆனால் பிறருக்கு நேருவதைத் தனக்கு நேருவது போல் உணரும் திறமையேயாகும். எனவே உண்மையுலகிற்கு கவிதையுலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தே தீரும். மக்களும் விலங்குகளும், மரம் செடி கொடிகளும் அடங்கிய உலகைப் புலன்களாலும் உணர்வாலும் காண்பது கவிதையின் முதற்படியாகும்; புதிய உலகத்தை உண்டதாக்குவதே இதன் இறுதிப் படியாகம். உலகைத்தை வெறுத்தோ, மறந்தோ கவிதை உருவாகாது. கவியின் படைப்பு நமது உலகத்தை ஒத்தும், ஒட்டியுந்தான் இருக்கும்.

கற்பனைத் திறத்தினால் கவி பலராக மாறிப் பல அனுபவங்களைப் பெறுகிறான். வீரனாகப் போர் புரிகிறான்; குருவியாகத் தானியம் கொத்தித் தின்கிறான். பசும் புல்லாக வளருகிறான். ஆனால், நீதிபதி போல் குற்றம் காண்பதோ தண்டிப்பதோ இல்லை. நல்லோர், தீயோர் இருசாரரையும் ஏற்கிறான், அழகும் கோரமும், இரண்டும் அவனை வசீகின்றன. எதையும் அவன் தள்ளாமல், உள்ளது அனைத்தையும் உள்ளபடி உணரவதே உண்மையழகு என்று கொள்கிறான். மலையின் முகடும். முள்ளின் கூர்மையும், தீயோரின் தீமையும் கவியின் உள்ளத்துக்கு உறுதி அல்லது செறிவு தருகின்றன.