பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

151


அழுத்தமான, ஆழமான உணர்ச்சியை நாம் பெற்று, நமது மனோபாவம் வளருதே கவிதைப் பயனாகம். பசி எடுத்து, உணவு உண்டு செரித்தால் உடலுக்கு இன்பமும் பலமும் உண்டாகம். நமது கற்பனைச் சக்திக்கும் பரிவு சக்திக்கும் கவிதையானது தகந்த உணவளித்து அவற்றை வளர்க்கிறது. பசியைக் கிளப்பும் உடற் பயிற்சியும், பசியைத் தீர்க்கும் நல்லுணவும் உடலுக்குச் செய்யும் உதவியைக் கவிதை நமது உள்ளத்துக்குச் செய்கிறது. பிறர் மகிழ்ந்தால் தானும் மகிழவும், பிறர் வருந்தினால் தானும் வருந்தவும் செய்யும் போது உண்டாகும் பரிவும் கற்பனைத் திறனுமே நம்மை நல்லவர் ஆக்குகின்றன. நீதி நூல் செய்யுளாயி ருப்பினும் கவிதையாகாது. மக்களை நேர்முகமாக நீதி போதனை மூலம் திருத்துவதும், சமூகத்தை மாற்றியமைப்பதும் கவிதையின் தொழில் அன்று. படிப்போரின் கற்பனைத் திறனைப் பெருக்கி, அவர்கள் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கவிதை மறைமுகமாய் மக்களை முன்னேற்றுகிறது.

கவிதை கடினமான காரியத்தைச் செய்தாலும், கவி கையாளும் முறை இலாகவமானது; இன்பம் பயப்பது. கவிதை அதிர்ச்சி தரலாகாது. நம் எண்ணங்களையும் உணர்ச்சிகளையுமே கவி சொல்வது போலத் தோன்றுகிறது. புதியதை அறிவுறுத்துவதாகவே கவிதை அமைய வேண்டும். கவிதையில் பெருகும் உணர்ச்சி வசப்பட்டு நாம் கவியின் நடையழகை அடியோடு மறந்து விடுகிறோம். கவியின் திறமையைக் காணில் கவிதையைக் காணாதவாறே! கவியின் நோக்கத்தைக் கண்டாலும் அது கவிதையையழித்து விடும். கவிஞனை மறந்து, கலையை மறந்து அழகில் ஈடுபடுகிறோம். கவிதையின் விளைவு கற்போரின் ஆன்மாவுக்கு நிறைவு தருவதாகம்; அவருக்குக் கோபமோ, வருத்தமோ, ஆசையோ எஞ்சி நிற்கலாகாது. முடிவில் அவருடைய உள்ளத்தில் அமைதி நிலவ வேண்டும்.