பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

153


வடிவிலே முதன்முதலாகத் தோன்றியிருக்க வேண்டும். ‘நாடோடிப் பாடல்கள்’ என்று வழங்கும் மக்கள் இலக்கியமே,அறிஞர்களின் கவனத்தாலும், பேணுதலினாலும், இலக்கண வரையறையினாலும் விரிவும் தொகையும் பெற்று வளர்ந்தது. இப்படி இலக்கிய வகை, தொகைகள் விரிய விரிய மக்களின் அறிவும் விரிந்தது.

ஆசுகவி, மதுரகவி, சித்திர கவி, வித்தார கவி என்று கவிஞரை நான்கு வகையிற் பிரித்தனர். கொடுக்கப்பட்ட குறிப்புக்களைக் கொண்டு, பாடலுக்குரிய அழகுகளுடன் விரைந்து பாடக்கூடியவன் ஆசு கவி. இனிய ஓசையும், கவிதைக்கு உரிய எழிலும் அமைய மதுரமாகப் பாடுவோன் மதுர கவி. மாலைமாற்று, சக்கரம், சுழி குளம், ஏக பாதம், எழு கூற்றிருக்கை, காதை கரப்பு, கரந்துறை பாட்டு முதலிய நுட்பங்கள் தெரிந்து பாடுவோன் சித்திர கவி. எடுத்துக் கொண்ட பொருளை விரிவாக்கி வித்தாரமாகப் பாடுவோன் வித்தார கவி.

தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை ஆராயும் பொழுது, கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி மூன்று சங்கங்களிலே வளர்ந்த சங்கத் தமிழ் நூல்களும், பின் பெளத்த ஜைனர் வளர்த்த இலக்கண இலக்கிய நூல்களும், பின்னர் ஏற்பட்ட சமய நூல்களும், பின்னர் மடாலயங்களின் ஆதரவு பெற்று வளர்ந்த சமய சாத்திர நூல்களும், பின்னர் ஆங்கில நாகரிகத் தொடர்பிலே மலர்ந்த புத்திலக்கியங்களுமாக ஐந்து பெரும் பிரிவுகளைக் காணலாம். சொல்லின் சுருக்கமும், கருத்தின் தெளிவும், வடமொழிச் சொற்கள் மிக மிக அருகிக் காணப்படுவதும், கற்பனையின் ஆழமும் சங்க நூல்களின் சிறப்புகள். இந் நூல்கள் பெரும்பாலும் தொகை நூல்களே. பின்னர்த் தோன்றிய பெளத்த ஜைன நூல்கள், இந்தச் சமயக் கோட்பாடுகளை வலியுறுத்தும கற்பனைக் காவியங்களும், மக்களுக்கு அறவழியைக் காட்டும் நீதி நூல்களும், மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாத இலக்கண நூல்களுமாக