பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

187


தொடக்கத்தில் பிரெஞ்சு மொழியில் கட்டுரை தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவை அம் மொழியில் இருந்த உரைநடை நூல்களே. இன்றும் பிரெஞ்சு மொழி உரைநடை இலக்கியங்களை வளர்ப்பதில் ஒப்பற்ற மொழியாக விளங்குகிறது. ஆகவே தற்கால இலக்கிய உலகிற்குக் கட்டுரை முறையைத் தந்துதவிய பெருமை பிரெஞ்சு மொழிக்கே உரியதாகும்.

பிரான்ஸ் நாட்டில் பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், இலக்கிய மறுமலர்ச்சிக்குக் காரணமாயிருந்தவரும், பெருங்குணமும் பேரறிவும் பெற்றவருமாகிய மான்டேன் என்பவரே கட்டுரை இலக்கியத்திற்குத் தந்தையாவர். இவருடைய கட்டுரைகள் 1582, 1587, 1588 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப் பெற்றன. அவைகளைச் சீர்தூக்கி ஆய்ந்து படித்த அறிஞர் ஒருவர் பின்வருமாறு கூறியிருக்கின்றார் : “மான்டேன் தம்மைப் பற்றியே எழுதிக் கொண்டு செல்கின்றார் என்றாலும், அது நமக்கு வெறுப்பையுண்டு பண்ணவில்லை. சாதாரணக் கருத்துகளையே வெளியிட்டிருக்கின்றார் எனினும் தரம் குறையப் பெறவில்லை; நிரம்பக் கற்றவராகக் காட்சியளிக்கின்றார், ஆனால் செருக்கின் நிழலும் இல்லை. உலகப் பழக்கவழக்கங்கட்கு மாறான கருத்துகளைத் தான் கூறுகின்றார், ஆனாலும் அவை குறுகியமனப் பண்புடையவையல்ல”

லாபிரியெர், ஜூபர்ட் போன்ற ஆசிரியர்களும் மான்டேனைப் பின்பற்றிக் கட்டுரையெழுதி வந்தார்கள். எனினும் அவர்கள் இலக்கிய விதிகட்கு அடிமைப்பட்டிருந்தமையால் மான்டேனைப் போன்று உரிமையுணர்வோடும் பரந்த நோக்கத்தோடும் அவர்களால் கட்டுரையெழுத முடியவில்லை. மான்டேன் ஒருவரால் தான் தம்மைப் பற்றியே கட்டுரையெழுதி வெற்றி பெற முடிந்தது. அவருடைய கட்டுரைகள் அனைத்தும் அவருடைய இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு, சமாதான உணர்வு, நாட்டுப்பற்று, மனிதப்பண்பு ஆகியவற்றை