பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



225

செந்தமிழ் பெட்டகம்


சென்றார். அப்போது முதலில் மகரிஷி தியானம் செய்வதற்காகச் சாந்திநிகேதன் என்ற பெயரால் போல்பூர் என்ற ஊரின் அருகே அமைத்திருந்த ஆசிரமத்துக்குச் சென்றனர். இங்குத் தந்தையார் ரவீந்திரருக்குச் சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றைப் போதித்தார். அக்காலத்தில் பிருதிவிராஜனைப் பற்றி ஒரு நாடகம் எழுதினார். ரவீந்திரர் 15ஆம் வயதில் ஒரு தேசியப் பாடலும் நீண்ட கவிதையும் எழுதினார். பானுசிங் என்ற பெயர் வைத்துப் பானுசிங் பதாவளி என்பதை இயற்றினார். இவர்தாம் பானுசிங் என்று அறிந்ததும் மக்கள் வியப்புற்றனர்.

ரவீந்திரர் அரசாங்க அலுவலாகவோ அல்லது பாரிஸ்டர் ஆகவோ ஆகவேண்டும் என்று இவருடைய தந்தையார் இவரை 1878ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். அங்கு ரவீந்திரர் லண்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஹென்றி ஜேம்ஸ் என்பவரிடம் கல்வி பயின்றார். ஆனால் கல்வி பயின்று முடிவுறு முன்பு 1880-ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்.

பின்னர் ரவீந்திரர் 1881-ல் சட்டம் பயில்வதற்காக மீண்டும் இங்கிலாந்து சென்றார். ஆனால் சட்டம் பயிலாமலேயே திரும்பி வந்தார். அதன்பின் எழுதுவதிலேயே ஆழ்ந்தார். 1882-ல் இவருடைய சந்தியா சங்கீதம் (மாலைப் பாடல்கள்) என்னும் கவிதைத் தொகுதி வெளியாயிற்று. அக்காலத்தில் பெரும்புகழ் வாய்ந்த வங்காள நாவலாசிரியரும் வந்தே மாதரம் என்ற கவிதையை முதன் முதல் இயற்றியவருமான பங்கிம் சந்திரர் ஒரு நண்பர் மகனின் திருமணத்துக்குப் போன இடத்தில் ரவீந்திரரைக் கண்டு வங்க இலக்கிய வானத்தில் எழுந்துள்ள உதய ஞாயிறு என்று புகழ்ந்தார். ரவீந்திரர் 7ஆம் வயது முதல் கவிதைகள் புனைந்தாராயினும், இப்பாடல் தொகுதிக்கு முன்னுள்ளவற்றைச் சிறந்தனவாக அவர் கருதவில்லை. ஆகவே இவருடைய கவிஞர் நிலை இப்பாடல் முதல் தொடங்கியது எனலாம்.