பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

227


ரவீந்திரருக்கு இருபத்திரண்டாம் வயதில் திருமணம் நடைபெற்றது இவர் தம் மனைவி மிருணாளினி தேவியுடன் இனிதாக இல்லறம் நடத்தினார்

1890ஆம் ஆண்டில் ரவீந்திரரை இவருடைய தந்தையார் தங்கள் ஜமீன் அலுவல்களை மேற்பார்க்குமாறு அனுப்பிவைத்தார். ரவீந்திரர் குடியானவர்களுடன் மிகுந்த அன்புடன் பழகி வந்தார்.

ரவீந்திரர் 1884-ல் பிரபாத் சங்கீதம் (காலைப் பாடல்கள்) என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டார் அது முதல் இவர் கவிதைகள், நாடகங்கள், பாடல்கள், கட்டுரைகள் ஏராளமாக எழுதலானார்

1884-ல் ரவீந்திரர் ஆதி பிரமசமாஜம் என்ற சமய சங்கத்தில் அமைச்சர் ஆனார். 1886-ல் இந்திய தேசீய காங்கிரசின் இரண்டாம் ஆண்டுக் கூட்டத்துக்குச் சென்று, தாம் இயற்றிய நாட்டு வணக்கப் பாடலைப் பாடினார் சமூக சீர்திருத்தங்களிலும் ஈடுபட்டார்.

இவர் சாதியையும் மேனாட்டுத் தேசியத்தின் தீமைகளையும் எதிர்த்தார் இவர் 1901ல் இயற்றிய நைவேத்தியம் என்னும் கவிதைகள் இவற்றை நன்கு விளக்கும்.

இவர் தந்தை 1863-ல் போல்பூர் என்ற இடத்தில் சாந்திநிகேதனம் என்ற ஆசிரமம் கட்டினார். அங்கு மகரிஷி அடிக்கடி செல்வார். இங்கு ரவீந்திரர் 1901-ல் தந்தையின் இசைவுபெற்று போல்பூர் பிரமசாரி ஆசிரமம் நிறுவிப் புதுமுறையில் கல்வி பயிற்றத் தொடங்கினார். இதுதான் பின்னால் விசுவபாரதி என்னும் பன்னாட்டுப் பல்கலைக்கழகமாய் விளங்கி வருகிறது.

1902-ல் இவருடைய வாழ்க்கைத் துணைவியார் ஐந்து குழந்தைகளை விட்டுவிட்டு மறைந்தார். ரவீந்திரர் பிரிவாற்றாமல் அவர்மீது பல கவிதைகள் புனைந்தார். அத்தொகுதி ஸ்மரண் (நினைவு) என்று பெயர் பெறும்