பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

செந்தமிழ் பெட்டகம்


ரவீந்திரர் 1920-ல் ஐரோப்பியாவில் பல நாடுகளுக்குச் சென்றார். பெரும்புலவர்களும் கவிஞர்களும் பெரிதும் பாராட்டினார்கள். ரவீந்திரர் 1921 ஜூலையில் இந்தியாவுக்குத் திரும்பி வந்து, இரண்டு திங்கள் ஆனதும் விசுவபாரதி என்ற சர்வதேசப் பல்கலைக் கழகத்தை நிறுவினார். அடுத்த திங்களில் கிராமப் புனர் அமைப்பு இலாக்காவை ஸ்ரீநிகேதன் என்ற பெயரால் அமைத்தார்.

ரவீந்திரர் 1924-ல் முதலில் சீனா, ஜப்பானுக்கும் பின்னர் தென் அமெரிக்காவுக்கும் போய்ச் சொற் பொழிவுகள் நிகழ்த்தி விட்டு, 1925 ஜனவரியில் இத்தாலி வந்து சில மாதங்கள் தங்கிவிட்டுப் பின்னர் சுவிட்ஸர்லாந்து சென்று, ராமான் ராலான் என்னும் உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியருடன் தங்கிவிட்டுப் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார்.

ரவீந்திரர் 1927-ல் சாந்திநிகேதனுக்குத் திரும்பி வந்து, 1929-ல் கனடா நாட்டின் அழைப்பின்மீது அங்குச் சென்றார். அமெரிக்காவில் வெள்ளை நிறமற்றவர்களைத் தாழ்வாக நடத்துவதை அறிந்து, அங்குப் போவதாயிருந்ததை நிறுத்திவிட்டு, ஜப்பான் வழியாக இந்தியா வந்தார்.

இதுவரை ரவீந்திரர் எல்லா நாடுகளுக்கும் கவிஞர் என்ற முறையில் சென்று வந்தார். ஆனால் 1932-ல் அவர் ஒவியர் என்ற நிலைமையில் பாரிஸ் நகரத்தில் தம் ஒவியங்களின் கண்காட்சி நடத்தினார். அதன்பின் கோப்பன்ஹேகன், மாஸ்கோ போன்ற நகரங்களில் இக் கண்காட்சி நடந்தது.

ரவீந்திரர் இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ‘மனிதன் மதம் என்னும் பொருள் பற்றிப் புகழ்பெற்ற ஹிப்பெர்ட் சொற் பொழிவுகளை நிகழ்த்தினார். பின் ஜெர்மனி சென்று, அங்கு ஐன்ஸ்டைன் என்னும் புகழ்பெற்ற விஞ்ஞானியைச் சந்தித்தார்.