பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

செந்தமிழ் பெட்டகம்


இசையின்பமுடையது. ரவீந்திரர் பேச்சில் நகைச்சுவை நிரம்பியிருக்கும்.

ரவீந்திரர் நல்ல உழைப்பாளி எழுபது வயது ஆகும் சமயத்தில் புதிதாக ஒவியத் துறையில் இறங்கி, நன்கு உழைத்து உலகம் வியக்கத்தக்க ஓவியரானார்.

ரவீந்திரர் ஆடம்பர வாழ்வில் விருப்பமில்லாதவர். எளிய வாழ்க்கையே அழகானது என்று கருதுபவர். வாழ்க்கை இன்பங்களை நுகர்ந்தாலும் எந்தக் கணத்திலும் அவற்றைத் துறக்கக்கூடிய ஆற்றல் உடையவராயிருந்தார்.

ரவீந்திரர் மக்களிடம் அளவு கடந்த அன்புடையவர். எதை நம்பினாரோ அதை உரைக்கத் தயங்கார். தவறு செய்து விட்டால் அதைத் திருத்திக் கொள்வார். இவர் குழந்தைகளிடம் மட்டற்ற அன்பு வைத்திருந்தார். அதுமட்டுமன்று, குழந்தைகளை மரியாதையாகவே நடத்துவார்.

ர்வீந்திரர் ஏராளமான பாடல்கள் இயற்றியுள்ளார். மனிதனுடைய எந்த உணர்ச்சிக்கும் தக்க பாடலைக் காண்பது எளிது. இவருடைய பாடல்களுள் ஏறக்குறைய இருநூறு பாடல்கள், மேனாட்டு இசைக்குத் தக்கவாறு மேனாட்டு மிகச் சிறந்த சாகித்திய கர்த்தாக்களால் மெட்டுக்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

ரவீந்திரர் கீதாஞ்சலி போன்ற தம் பாடல்களுள் சிலவற்றைத் தாமே ஆங்கில உரைநடையிலேயே மொழி பெயர்த்தனர். உரைநடையாயிருந்த போதிலும் கவிதை போல் இசை நிறைந்துள்ள இவருடைய பாடல்கள் கருத்தும் இசையும் இணைபிரியா விதத்தில் ஒன்றியுள்ள காரணத்தாலேயே வேற்றுமொழி அறிஞர்களும் பாராட்டுகின்றனர்.