பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

செந்தமிழ் பெட்டகம்


இணைத்துப் புனையும்பொழுதே நாடக சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. பிரதான சம்பவத்தில் தலை தூக்கி நிற்பது ஏதாவது ஒன்றிரண்டு முக்கிய ரஸபாவந்தான். ஒரேவித ரஸானுபவம் நமக்குச் சலிப்பை உண்டாக்காதவாறு, வேறுபல ரஸபாவங்கள் இருக்க வேண்டும். அப்படி உதவுவது உபகதை.

கதைப்போக்கை, உணர்ச்சி தரும் நாடகமாகச் சித்திரிக்கும்போது அவ்வுணர்ச்சிப் போக்கு மூன்று நிலைகளாகப் பிரியும். உணர்ச்சியின் வேகத்தாலேற்படும் சிக்கல்களைச் சித்திரிப்பது முதல் நிலையாகிய எதிர்ப்பு நிலை. இச்சிக்கல்களாலுண்டாகும் எதிர்ப்பு நிலையின் கடுமையை உணர்த்துவது இரண்டாவதாகிய உச்சநிலை. இப்படி முனைந்து நிற்கும் எதிர்ப்புக்களின் சிக்கல்கள் நீங்குவதைக் காட்டுவது மூன்றாவதாகிய முடிவுநிலை.

ஒரு நாடகத்தை ஐந்து அங்கங்களாகவும் ஒவ்வோர் அங்கங்கத்தையும் பல்வேறு காட்சிகளாகவும் வகுப்பது வழக்கம். முதல் இரண்டங்கங்களில், உணர்ச்சி வேகச் சிக்கல்களின் எதிர்ப்பு நிலையையும், மூன்றாமங்கத்தில் எதிர்ப்புக்களின் உச்சநிலையையும், நான்காமங்கத்தில் முனைந்த சிக்கல் தாமாக அவிழத் தொடங்குவதையும், ஐந்தாமங்கத்தில் முடிவு நிலையையும் அமைப்பர். பின்னர், ஒவ்வோரங்கத்தையும் உணர்ச்சி வேகம் இவ்வாறு உயர்ந்து தாழ்ந்திடும் முறையில், பலப்பல காட்சிகளாகப் பிரித்திடல் வேண்டும். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நாடகச் சந்தர்ப்பமாகும்.

நம்மை மறந்து, நாடக பாத்திரங்களுடன் ஒன்றிவிடச் செய்யவல்ல உரையாடல் வகை நாடகத்தில் விருவிருப்பை உண்டாக்கும். சம்பாஷணைப் போக்கை எதிர்ப்பு நிலையில் விரிவாகவும், உச்சநிலையில் விருவிருப்பாகவும, முடிவு நிலையில் துரிதமாகவும் அமைப்பதே உணர்ச்சி வேகம் பெருகியோடச் செய்ய வல்ல தந்திரமாம். உணர்ச்சி வேகத்தை ஆங்காங்கே தேக்கிக் காட்டுவதற்காகத் தனிமொழிகள் தகுந்த