பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

87


தெருவில் நடிக்கத் தொடங்கினர். லத்தீன் சிறிது சிறிதாக மறைந்தது. சமயத்துக்கு முரணான வினோதக் காட்சிகள் வந்து புகுந்தன. கத்திச் சண்டை போன்றவை வந்து மக்கள் மனத்தைக் கெடுத்தன. பெண்கள் நடிப்பது அருமை. சிறுவர்கள் பெண் பாத்திரங்களாக நடித்தனர்.

நாளடைவில் சமயத் தொடர்பில்லாத நாடகங்கள் தோன்றின. இன்பியல், துன்பியல் என்ற வேறுபாடு தெளிவாகக் கருதப்படவில்லை. நாடகத்தினிடையே சண்டைக் காட்சி ஏற்பட்டால் அந்த நாடகம் துன்பியல் நாடகம் என்று கருதப்பட்டது.

சமயத் தொடர்பான நாடகங்களுடன் ஒழுக்க நாடகங்களும் இயற்றப்பட்டன. ஒழுக்க பாத்திரங்களாக இருக்கும். இவை தவிரப் பிரகசனம் என்ற நாடக வகையும் தோன்றிற்று. இவற்றுள் பியர் பாதெலின் என்பது மிகச் சிறந்தது. இன்றுவரை அது புகழ் பெற்றதாக இருந்து வருகிறது. இந்த நாடக வகைதான் முதன்முதலில் பிரெஞ்சு நாட்டு விஷயங்களைப் பொருளாக வைத்து அமைக்கப்பட்டதாகும்.

இடைவேளை நாடகம் என்பது விருந்து சமயங்களிலும், சமய நாடகம் நடக்கும்போதும் இடை வேளையில் நடைபெறும் சிறிய நகைச்சுவை நாடகமாகும்.

1500 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸில் சமய நாடகம் நலிவுற்றது. வேத நாடகங்கள் மெல்ல மெல்ல மறைந்தன. பிரெஞ்சு நாடகாசிரியர்கள் செனிக்கா, பிளாட்டஸ், டெரன்ஸ் போன்ற ரோமானிய நாடக கதாசிரியரைப் பின்பற்றினர். ரோமானிய வீரர்களும் கிரேக்க விரர்களுமே இரு நூறு ஆண்டுக்காலம் பிரெஞ்சு நாடகங்களுக்குப் பொருளாக அமைந்தனர். முதலில் இயற்றப்பட்ட நாடகங்களில் பேச்சுத்தான் முதன்மை பெற்றது. நடிப்பு மிகக் குறைவு. கார்னியே என்பவர் சிறப்புற்றிருந்தார்.