பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

117


அறுத்து 'வெவ்வாய்த் தட்டை" செய்து. அதனால் புனத்திற் படிந்த குருவிகளை ஒப்பின செய்தி, "அமையறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்," (2) "பெருவரையடுக்கத்துக் குருவியோப்பி" (5) என்ற அடிகளால் குறிக்கப் படுகிறது. அக்குருவிகளை ஒப்பியதற்குக் காரணம் கூறுவதற்காக, “உளைக் குரல் சிறுதினை கவர்தலின்" (4) என்கின்றார். அத்தினையின் அருமையை உணர்த்தும் பொருட்டு, அத்தினைப்புனம் ஆங்கிருந்து சந்தன மரங்களை முற்ற எறிந்து, அவ்விடத்தையும் அரிதின் உழுது பயிர் செய்யப்பட்டதென்கின்றார். இதனை “நறுவிரை யாரம் அற எறிந்து உழுத உளைக் குரல் சிறுதினை" என்று பாடியுள்ளார். வந்து படிந்த குருவிகளும் ஒன்றிரண்டல்ல. பல என்றற்கு “கிளையமல் குரீஇ" என்கின்றார்.

இனி, இத்தினைப் புனமிருந்த இடம் தென்மலையின் சரிவு; தினைமுற்றும் காலம் வேங்கை மலரும் காலமாகும். அப்போது தான் அப்புனம் காக்கப் படுதல் வேண்டும். தினைப்பயிரும் மிக வுயரமாக வளர்ந்திருந்தது. ஆகவே, புனங்காத்தற்கு அமைக்கும் பரண் மிக வுயர்ந்திருக்க வேண்டியதாயிற்று. இக் கருத்தெல்லாம் தோன்றவே, இச் சான்றோர், “ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளினர் நறுவி, வேங்கையங் கவட்டிடை நிவந்த இதணத்து’ என்று குறிக்கின்றார்.

இனி, பரண்மீதிருந்த நங்கையர், குருவியோப்பி, பரணருகே மலர்ந்து மணக்கும் வேங்கை மலரிற் படிந்து தாதுதும் தும்பியின் இன்னிசையில் கருத்தைச் செலுத்தி யிருந்தனரன்றோ? இன்றேல், அங்கே வல்விற் காளையைக் கண்டிருப்பர். அதனால்தான் தோழி, "தும்பி இன்னிசை ஒரா இருந்தனமாக” என்கின்றாள்.

இனி, "மையிரோதி" என்பதுமுதல், "போகலுறுமோ மற்று" என்பதுவரை வல்விற்காளை வழங்கிய சொற்களாகும். புனம் நோக்கி வந்தவன் எதிரே தம் கரிய குளிர்ந்த குழலைக் காட்டித் தம் இளமை நலம் இலக நின்றனர் இம்மகளிர். கெடுதி வினவிவருவோன்,அவர் முன்வந்து நின்று செவ்வியறிந்து கேட்கும் அத்துணை மனவமைதியிலனாவான். வேறு ஒசை செய்யின், அவர் அஞ்சுவர். அவன் கண்ணெதிரே தோன்றுவது அவர்தம் கரிய குழலே. அதனால், "மையிரோதி மடநல்லீரே"