பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

157


தமிழ் மகன் மகப்பேறு குறித்து மகிழ்கின்றான். மக்களை யில்லாத வாழ்க்கையை விரும்புவதிலன். "மக்களை இல்லோர்க்குப் பயக்குறையில்லை தாம்வாழும் நாளே” என்று கூறுவன். பெற்ற மக்கள் தம் குடியின் உயர்ச்சிக்கு உழைத்தல் வேண்டுமெனக் கருதுகின்றான். அன்ன மக்களைப் பெற்றோரை வாயார வாழ்த்தி மகிழ்வன்.

"எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து,
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற் கமைந்த அரசுதுறை போகிய
வீறுசால் புதல்வற் பயந்தனை.”

என்று பாராட்டுதலைக் காண்க.

இனி, இவனது உள்ளத்தே கடவுள் உணர்ச்சி வீறுபெற்று நிற்கின்றது. "பல்லோரும் பரம்பொருள் ஒன்று உண்டு; அதன்பால் பரிவுகொடு பரசி வாழ்தல் எல்லோரும் செய்கடனாம்” என்று கருதி வாழ்பவன். இவன் ஆண்டவனை வழிபட்டு வேண்டுவன மிக்க வியப்புத் தருவனவாம். சங்க காலத்தே ஏனை. நிலத்து மக்கள் வேண்டியன வேறு. பிறர் அழிவதையும், பிறர் ஆக்கம் கெடுவதையும் பொருளாகக் கருதி ஆண்டவனை வேண்டினர் பிறர்; தமிழன்,

                           “யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமு மல்ல,
அருளும் அன்பும்அறனும் மூன்றும்.”

என்றும்,

“யாமும் எம் சுற்றமும் பரவுதும்,
ஏம வைகல் பெறுகயாம் எனவே.”

என்றும் வேண்டுகின்றான்.

இங்ஙனம், சங்ககாலத் தமிழ்மகன், தன் வாழ்க்கையைத் தனக்கேயன்றிப் பிறர்க்கும் தன் நாட்டின் நலத்துக்கும் எனக் கருதிச் செலுத்தி, வழிபாட்டை மறவாது, மேற்கொண்டு, அவ்வழிபாட்டிலும் தன் வாழ்வின் குறிக்கோள் கை கூடுதற்கு ஆக்கமாகும் அருள், அன்பு, அறம் என்ற மூன்றுமே விரும்பியிருந்த நிலையை, இற்றைநாளில் மக்கள் அறிந்து நலம் பெறுவாராக!