பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

செம்மொழிப் புதையல்



“அலர்ந்த விரிநீ ருடுக்கை யுலகம் பெறினும்
அருநெறி யாயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே.”

என்ற முல்லைப் பாட்டு இதற்குத் தக்க சான்றாகும். களவு நெறியில் காதலுற்றுக் கற்பு நெறியில் மணம் செய்து கொண்டு கணவனும் மனைவியும் ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாய் ஒழுகும் மக்களாதலின் மறுமண நிகழ்ச்சி பழந்தமிழர் வாழ்வில் இடம் பெறாதாயிற்று.

மணந்து கொண்ட கணவன் போர் முதலியவற்றால் இறுதி எய்தாது முதுமையெய்துங்கால், அவன் உள்ளத்தே இதுகாறும் நுகர்ந்து போந்த நுகர்ச்சிகளில் உவர்ப்பும் வெறுப்பும் பிறந்து துறவு மேற்கொள்ளும் வேட்கையையுண்டுபண்ணும். இக்கருத்தையும் செயலையும் காணும் சான்றோர் அவர்க்கு வீடு பேற்றுக்குரிய மெய்யுணர்வையும் தவத்தின் செயல் முறையையும் அறிவுறுத்துவர். அதனால், அவர்கள் தமக்குத் துணையாகிய மனைவியுடன் துறவு மேற்கொண்டு மெய்யுணர்ந்து, அவா அறுத்து, யான் எனது என்ற செருக்கற்று, அறிவு நூல்களைக் கண்டு செம்பொருளாகிய கடவுளின்ப வாழ்வுக்கு உரியராவர். இதுபற்றியே தொல்காப்பியர், “அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்று வற்புறுத்தினர். இறத்தல் என்றது வயது முதிர்தல்.

ஒருவனுக்கு ஒருத்தி யென்ற முறையில் தமிழ் மக்கள் உலகு இணைப்புண்டிருந்தமை பழந்தமிழ் நூல்கள் உரைக்கும் உண்மையாகும். ஆயினும், அந்நாளில் நாடுகட்கிடையே அடிக்கடி நிகழ்ந்த போர்களால் ஆண் மக்கள் தொகை குறைந்தது; போரில் ஈடுபடாமையும் பாதுகாக்கப் படுதலுமாகிய செயல்களால் மகளிர் தொகை மிகுந்தது. பெண்டிரைக் கொல்லலாகாது என்பது பழந்தமிழர் போரறம். இதே நிலை மேலைநாடுகளிலும் நிலவியதால், மிகுந்து நின்றமகளிரை மனைவியாகவும் உரிமை மகளிராகவும் கொள்வது அவர்கள் நாட்டு வேந்தர்கட்கும் செல்வர்கட்கும் ஒராற்றால் கடமையும் மரபும் ஆயின. அந்தச் சூழ்நிலையே தமிழ் நிலத்தும் இருந்தமை யின், மிகை மகளிரைப் பரத்தையரெனக் குறிப்பாராயினர். பரம்-