பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13.வாணிக மந்திரம்

வாணிகம் என்பது நமது நாட்டில் பொதுவாக யாவரும் செய்யக்கூடிய தொழில் என்று பலரும் கருதுகின்றனர். உடம்பை வருத்திச் செய்யக்கூடிய உழவு முதலிய தொழில்கள் இழிந்தவை என்றும், அரசியலில் அரைப்பணச் சம்பளத்துக்காயினும் வேலை பார்ப்பதுதான் உயர்ந்தது என்றும், வாணிகம் செய்வது நடுத்தரமானது என்றும் இடைக்காலத்தில் மக்கள் மனத்தில் ஒரு கருத்துத் தோன்றி நிலவுவதாயிற்று. இதன் விளைவாகக் கற்றவர் அரசியல் வேலையாட்களாகவும், பணிபுரிபவர்களாகவும் அலுவலாளர்களாகவும் புகுந்து வாழ்க்கை நடத்துவாராயினர். கல்லாதவர் பலரும் உழவு முதலிய தொழில்களை மேற்கொண்டனர். சிறிது கற்று இடைநிலையில் நின்றவர் வாணிகம் செய்பவராயினர். வேலைகிடைக்காதவன் வெற்றிலை பாக்குக் கடையேனும் வைத்து வாணிகம் செய்து வாழலாம் என்று கருதும் அளவுக்கு வாணிகம் நடக்கத் தலைப்பட்டது.

சிறந்த கல்வியறிவும் வலிய உடலுழைப்பும் இல்லாதவர் பலரும் வாணிகத்தில் நுழைந்தமையால் வாணிகத் தொழில் ஒரு சில இடங்களில் தாழ்வாகவும் கருதப்படுவதாயிற்று. ஒரு சிலர்க்குப் பொழுது போக்காகவும் பயன்பட்டது. இத்தகைய வாணிகத்தில் வளர்ச்சியும் வளமையும் உண்டாதற்கு வழி இல்லாமையால் நட்டம் வருவதும், நிலைதவறிவிழ்வதும், எழுவதும் இயற்கையென்று மக்கள் கருதுகின்றார்கள். "முப்பதாண்டு வாணிகம் செய்து வாழ்ந்தவரும் இல்லை," கெட்டவரும் இல்லை" என்றொரு பழமொழியும் உலகில் நிலவுகின்றது. மேனாட்டு வணிகர்கள் தங்கள் வாணிகத்திற்கு வெள்ளிவிழா (25ஆம் ஆண்டுவிழா) பொன்விழா (50ஆம் ஆண்டு விழா) மணி விழா (80ஆம் ஆண்டுவிழா) நூற்றாண்டு விழா என விழாக் கொண்டாடுகிறார்களே; அதுபோல் நம்மவர் ஏன் செய்யமுடிவதில்லை? அவர்கட்கு மாத்திரம் நிலையாக நின்று