பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

197


இவ்விருவரது வாணிகமும் சிறக்கவில்லை. வணிகரிடையே பொறாமையும் பூசலும் போரும் உண்டாயின. அவரவர் பக்கலிலும் ஆட்கள் பலர் மாண்டனர்.

அந் நாளில் இக் கோனாடு, இரட்டபாடி கொண்ட சோழ வளநா டென்ற பெயரால் சோழ வேந்தர் ஆட்சியிலிருந்த தென முன்பே கூறினோம். அக் காலத்தே இந்நாடு பொற் கோயிற்படையும் பழியிலிப் படையும் என இரு படைகளின் காவலில் இருந்தது. இவ்விரண்டற்கு முரிய தலைவர் இருவரும் காவற்றலைவராய் இருந்தனர். இவ் விருவரும் தொடக்கத்தில் நடுவு திறம்பாது நின்று நாட்டு மக்கட்கு இவர்களால் ஊறுண்டாகா வண்ணம் பாதுகாத்து வந்தனர். புதியராய்த் தோன்றிய வணிகர், தானைத் தலைவர் இருவரையுங் கண்டு, 'வடுக வாணிகர் பூசலால் நாட்டிலுண்டான வெற்றிலை பாக்குக் குறையை நாங்கள் முன்னின்று நீக்கி நற் பணி புரிந்தோமாதலால், எங்கட்கு இனி இந் நாட்டில் இடமில்லாதவாறு செய்தல் முறையாகாது' என வேண்டிக் கொண்டனர். அவர் செயலின் நலந் தேர்ந்து தலைவர் இருவரும் அவர்கள் வாணிகத்துக்குச் சலுகை தரத் தொடங்கினர். ஆனால், அவர்கள் திருநலக் குன்ற முடையார்க்குச் செலுத்த வேண்டிய தரகினைக் குறைத்தே செலுத்தினர். கிராஞ்சி மலைத் திருமலையும் வேத கோமபுரத்து அருளாளனும் தாம் செய்த தவற்றுக்கு வருந்திக் கோனாட்டுத் தலைவரிடத்தும் கோயிலாரிடத்தும் முறையிட்டனர். பெருஞ் செல்வர்களாதலால், சகஸ்ரர் இருவரும் வாணிகத்தால் ஊதியம் பெருகினும் சிறுகினும் திருநலக் குன்ற முடையார்க்குரிய தரகு குறையாமலே ஆண்டுதோறும் செலுத்தி வந்தனர். புது வாணிகர்க்கு அஃது இயலாதாயிற்று. இவற்றையெல்லாம் எண்ணிய தலைவர்கள் செய்வது தெரியாது திகைப்புற்றுத் தஞ்சை மாநகர்க்குச் சென்று சோழ வேந்தன் முதற் குலோத்துங்கன் திரு முன் முறையிட்டனர். வேந்தர் பெருமான் கோனாட்டுப் படைத் தலைவர் இருவர்க்கும் திருநலக் குன்ற முடையார் கோயிலதிகாரிகட்கும் திருமுகம் விடுத்து 'உண்மை யாராய்ந்து தரகர்களை நிறுவி முறை வழங்குக’ என்று ஆணை பிறப்பித்தான். திருமுகம் கோனாட்டுத் தலைவர்பால் வந்து சேர்ந்தது.

திரு முகம் வரக் கண்ட கோனாட்டுத் தலைவர்கள் எதிரெழுந்து வரவேற்று வேந்தனை வாழ்த்தி, பொற் கோயில்