பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

செம்மொழிப் புதையல்


கைக்கோளர் மூன்று படைத் தலைவரையும் பழியிலிப் படை ஐஞ்ஞூற்றுவர் தலைவரையும் ஏனைத் தலைவர்களையும் திருநலக் குன்றத்து மகா தேவர் கோயிலினுள்ளால் ஒருங்கு கூட்டி ஆராயத் தொடங்கினர். அரசியலாணைப்படி முதற்கண் திருநலக்குன்ற முடையார் கோயிற்கு ஆண்டு தோறும் வேண்டியிருக்கும் வெற்றிலை பாக்குத் தரகு கணக்கிடப் பெற்றது. ‘ஆண்டொன்றுக்கு அடைக்காய் அமுதுக்கு முப்பதினாயிரம் பாக்கும் எழுநூற்றைம்பது கட்டு வெற்றிலையும்’ வேண்டியிருப்பது தெளிவாயிற்று. மேலும், இவற்றை முன்பெல்லாம் திருமலை சகஸ்ரனும் அருளாளன் சகஸ்ரனுமே கொடுத்து வந்தார்களென்பதைக் கோயிற் கணக்குகள் தெரிவித்தன; அவ்விருவருடைய கணக்குகளும் அவ்வாறே குறித்திருந்தன. பின்னர், இந் நாட்டில் இனி வந்திறங்கும் வெற்றிலை பாக்குகட்குத் தரகு செலுத்தி வாணிகம் செய்யும் தலையுரிமை நல்குவது பற்றி ஆராய்ச்சி நடந்தது. தானைத் தலைவர் இருவரும் அவர்தம் துணைவரும் புதியராய்த் தோன்றிய வாணிகர்சார்பாகப் பேசினர். அவர்களால் மேலே கண்ட தரகினைத் தர இயலாமை விளங்கிற்று. திருமலையும் அருளாளனும் வழக்கம் போலத் தாங்கள் செலுத்துவதாக உடன்பட்டனர். அதனால், கூடியிருந்த மகா சபையார். ‘இனி, இந்த நாட்டில் வந்திறங்கும் வெற்றிலைக்குத் தரகு கொண்டு கிழிய நின்றான் திருமலையும் அருளாளன் சகஸ்ரனும் இவர்கட்குப் பின் இவர்கள் வருக்கத்தாரும் இடக்கடவர்களாக’ என்று தீர்மானித்துச் சோழ வேந்தனுக்குத் தெரிவித்தார்கள். வேந்தர் பெருமான், தனது ஆட்சி ஆட்சி யாண்டு முப்பத்தாறாவது முதல் இங்ஙனமே நடைபெறுக’ என்று கல்வெட்டித் தருமாறு பணித்தான். மேலும், இதனைக் கோனாட்டாரும் மூன்று படைப் பொற் கோயில் கைக்கோளரும் இந் நாட்டுப் படை பழியிலி ஐஞ்னுாற்றுவரும் நிலை நிறுத்தக் கடவ ரென்றும் ஆணை பிறப்பித்தான்.