பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

செம்மொழிப் புதையல்


முதலியோர்களும் ஏனைச் சமயங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். இதனையடுத்து வந்த நூற்றாண்டுகளில் சமய வேறுபாடுகள் நாட்டில் நிலவின வாயினும், தமிழ் நாட்டு அரசியலாளர் இச் சமயங்கட்கு இடுக்கண் விளைக்க வில்லை. அவ்வச் சமயத்தவர்க்கும் வேண்டும் உரிமைகளை வழங்கியிருக்கிறார்கள். முதல் இராஜராஜன் போனார்த் திருமலையி லிருக்கும் சமண் கோயிலுக்கு நிபந்தம் விட்டிருப்பதும், லெய்டன் கிரான்டு எனப்படும் சாசனங்களால் பெளத்தர் கோயிலுக்கு நிபந்தம் விட்டிருப்பதும், அவன் பின் வந்த சோழர்களுள் மூன்றாம் இராஜராஜன்.

செப்பரிய வடகலையும் தென்கலையும் தலையெடுப்ப
நீதிதரு குலநான்கும் நிலைநான்கும் நிலைநிற்ப
ஆதியுகம் குடிபுகுத அறுசமயம் தழைத்தோங்க

என்றும், மூன்றாம் இராஜேந்திரன், “சமஸ்தஜகதேக வீர” என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியில் ‘ராஜ பரம மாகேஸ்வர ராஜ நாராயண சகல சமய ஸ்தாபக” என்றும், பாண்டி வேந்தருள் மாறவன்மன் சுந்தர பாண்டியன், ஒரு குடை நீழலிரு நிலங் குளிர,

மூவகைத் தமிழும் முறைமையின் விளங்க,
நால்வகை வேதமும் நவின்றுடன் வளர
ஐவகை வேள்வியும் செய்வினை இயற்ற
அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ
எழுவகைப் பாடலும் இயலுடுன் பரவ

என்றும், சடையவன்மன் சுந்தரபாண்டியன்,

ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்
தருமறையோர் ஐவேள்வி யாறங்க முடன்சிறப்ப
அருந்தமிழும் ஆரியமும் அறுசமயத் தறநெறியும்
திருந்துகின்ற மனுநெறியும் திறம்பாது தழைத்தோங்க

என்றும் கூறுவதும் பல்வகைச் சமயங்களும் தத்தம் உரிமை குன்றாது நிலவியிருந்தன என்பதற்குச் சிறந்த சான்று பகர்கின்றன.

இனி, அச்சம் என இழிவாகப் பேசப்படுவது, செய்தற்குரிய அறங்களைச் செய்தற் குண்டாகும் அச்சமே. பழி பாவங்கட்கு அஞ்சும் அச்சம் அற மெனவும், ஏனைய அறங்களைச் செய்தற்கு-