பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. உரையனுபவம்


மது தமிழ் மொழிக்குப் பெருமை தருகின்ற நூல்களில் தொல்காப்பியம். திருக்குறள் என்ற இரண்டு நூல்களும் தலை சிறந்தனவாகும். அவற்றுள், தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூவகை நெறியில் தமிழருடைய எழுத்தும் சொல்லும் உணர்வும், ஒழுக்கமும், வாழ்வும், பண்பாடும், பிறவும் உரைக்கின்றது. திருக்குறள் தமிழரிடை நிலவிய அறமும், பொருளும், இன்பமுமாகிய நினைவும் - சொல்லும் செயலுமாகிய கூறுகளைக் குறட்பாக்களால் உரைக்கின்றது. அதற்கு உரைகண்ட ஆசிரியர் பலர் அவர்களில் நுண்மாண் நுழைபுலச் செல்வராய். தமிழ் மரபோடு வடநூல் மரபும் நன்குணர்ந்த தமிழ்ச் சான்றோராய் விளங்கியவர் பரிமேலழகர். அவர் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரை தனிப்பெரும் நூலாகப் பயிலத் தக்க பண்பு அமைந்தது. தமிழில் மேன்மையான நூல்கள் எனச் சிலவற்றை நானூறு, ஐந்நூறு ஆண்டுகட்கு முன் ஒரு பெரியவர் ஆராய்ந்து தொகுத்துக் கூறினார். அவர் இன்னார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆயினும், அவர் உரைத்தது வெண்பா வடிவில் இருக்கிறது.

“வள்ளுவர் மெய் யன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளு பரிமேலழகர் செய்த உரை - ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் -
தண்டமிழின் மேலாம் தரம்.”

என்பது அவ்வெண்பா, இவ்வெண்பாவை நோக்குமின்; திருக்குறள், தொல்காப்பியம், தொண்டர் புராணம் எனப் பல நூற்களைத் தொகுத்த அந்தப் பெரியவர், அவற்றிற்கு ஒப்பாகப் பரிமேலழகர் உரையையும் நிறுத்தி உரைப்பது, பரிமேலழகர் உரைக்குப் பழங்காலப் புலவர் பெருமக்கள். எத்தகைய மதிப்பு வைத்திருந்தனர் என்று நமக்கு அறிவிக்கின்றது.