பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

225


நெறிகளால் மேற்கொண்ட இலக்கண இலக்கியங்கட்கு உரை காண்பது அம்மரபு. அம்மரபு, பிற்கால நூல்களான நன்னூல். நேமிநாதம், யாப்பருங்கலம் முதலிய இலக்கண நூல் உரைகளில் மேற்கொள்ளப் பெற்றிருக்கிறதேயன்றி, இலக்கியங்கட்கு எழுதிய உரைகளில் தெளிவாகக் காணப்படுவதில்லை. பழைய உரை முறையே மறவாது கடைப்பிடித்த தொன்றே, பரிமேலழகர்க்குத் தனிச் சிறப்பையும் அவர் உரைக்கு அழகையும் தருகிறது.

எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்றாலும் பொருள் காணும் மரபு. நூலாசிரியன் உள்ளக் கருத்தை ஆழ அகழ்ந்து கண்டு, அறிவு நெறியால் ஆராய்ந்து உரைக்கும் மாண்பும், அருமையும் அமைந்ததாகும். மேற்போக்காக நுனிப்புல் மேயும் விலங்கு நோக்கம் இந்நாளில் வேற்றுமொழிப் பயிற்சியால் மக்களிடையே பெரிதும் பரவி இருக்கிறது. அன்றியும், கல்வியின் நோக்கம், அறிவும், ஒழுக்கமும் பெறுவது என்பதைக் கைவிட்டு, ஏலாதன செய்தேனும் வயிறு வளர்ப்பது என்பது கொள்கையாக மாறியதனால், இவ்விழி நிலை உண்டாயிற்று. இக்கருத்துடை யாரே வழி வழியாக வாழ்வியல் தலைவர்களாக வந்தமையால், இந்நிலைமை மேன் மேலும் ஆதரவு பெற்று வளர்ந்து வருகிறது. நூலாசிரியர் கூறும் கருத்துகளை, “ஏன்? எப்படி?” என எழும் வினா விடைகளால் நுண்ணறிவு கொண்டு தூய்மை செய்து கொள்வது உயர்நிலை மாணவர் கல்வி முறையிலேயே கைவிடப்பட்டுள்ளது. அதனால், கல்வி பயில்வோரிடையே காரண, காரிய முறையில் ஆராய்ந்து உண்மை காணும் பயிற்சி தேய்ந்து போயிற்று. பரிமேலழகர் ஒருவரே, அதனை ஓரளவு விடாது கடைப்பிடித்து உண்மை உரை காண்பதில் பெரிதும் முயன்று வெற்றி பெற்றுள்ளார். எனினும், அவர் வேற்று மொழி மரபும், தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்ந்தும், வாதனை வயத்தால் சில பல குறட்பாக்களில் குழறுபடை செய்து குற்றப்படுகிறார். ஆனாலும், அது பற்றி அவரது உரை மாண்பும் அழகும் குன்றுவதில்லை.

எடுத்தோத்து என்பது எடுத்து ஒதப்படும் பாட்டும் அதன் கருத்துமாகும். இதனை எடுத்துரை என்பது வழக்கம். பொறுப்பவர்க்குப் புகழுண்டாகும்: பொறாது ஒறுப்பவர்க்கு ஒரு நாளை இன்பமேயாம் என்ற கருத்தை,

செ-15