பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

செம்மொழிப் புதையல்



இவ்வாறு எடுத்துரை. இலேசு, உத்தி என்ற நெறிகளில் உத்தி வகை, இலக்கணவமைதி காட்டல், தருக்க நெறியில் விளக்கம் கூறல், வினாக்கட்கு விடை வழங்கல், கருத்துரை தருதல் என வருவன பலவற்றையும் நினைவிற் கொண்டு திருக்குறட்குப் பொருள் விளக்கம் செய்கிறார் பரிமேலழகர்.

“செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.”

என்பது குறட்பா. அதன்கண், ‘செய்து ஏமம் சாராச் சிறியவர்” என்ற தொடர் பரிமேலழகரது இலக்கண அறிவை ஈர்க்கின்றது. “ஏமம் சாரா” என்ற தொடர் சிறியவர் என்ற சொல்லோடு இயைவது பொருத்தமா? ‘புன்கேண்மை’ என்ற சொல்லோடு இயைவது பொருத்தமா? என்று ஒரு மயக்கம் உண்டாகிறது. அதை எண்ணிய பரிமேலழகர் “ஏமம் சாராச் சிறியவர்” என்று இயைப்பது உண்டு; அது கூடாது. “சிறியவர் என்பதனைக் கொள்ளின் செய்து என்பது நின்று வற்றும்” என உரைக்கின்றார். உரை எழுதும்போது இத்தகைய குற்றம்படக் காண்பது முறையாகாது. இதைக் கருத்திற் கொண்டு, “இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்” என்பதொன்றே பரிமேலழகர் நன்கு எண்ணி எழுதுகிறார் என்பது விளங்கும்.(817)

“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும்.”

என்பது வேறொரு குறட்பா. இதன்கண் இரண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஒன்று வெகுளியை மறத்தல் வேண்டும் என்பது. மற்றொன்று அதனால் தீயவை பிறக்குமென்பது. இவ்விரண்டிற்கும் ஒரு தொடர்பு காட்டினாலன்றி, இரண்டும் ஒரு குறட்பாவில் கூறுதற்கு ஆகா. கூறப்பட வேண்டுமாயின் இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும். தொடர்பில்லாத இரண்டு கருத்துக்கள் ஒரு குறட்பாவில் கூறப்படா என்பது உரை மரபு. ஆனால், இரண்டிற்கும் தொடர்பு காணும் போது வெகுளியை மறவாவிடத்து தீமை உண்டாகும் என இரண்டிற்கும் காரண காரியத் தொடர்பு கண்டு, மறத்தல் வெகுளியை அதனால் வரும் என்பதை ஏதுவாகவும் நிறுத்திப்-