பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

செம்மொழிப் புதையல்


தொல்காப்பியனார் “எழுத்தெனப்படுப அகரமுதல் னகர விறுவாய் முப்பஃதென்ப" எனத் தொடங்கினரேயன்றி, எழுத்தாவது இஃது என இலக்கணங் கூறிற்றிலர். அவ்விலக்கணங் கூறப்புகுந்த பவணந்தியார், "மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து" என்று மொழிகின்றார். இதன்கண் "அணுத்திரள் ஒலி" என்றது சமண் சமயக் கருத்து. இதனையே எழுத்துக்களின் பிறப்புக் கூறுமிடத்தும், ‘'நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழும் அணுத்திரள்" எனச் சிறுவர் மனத்தில் நன்குபதியக் கூறியிருக்கின்றார். இத்துறைக் கண் ஆசிரியர் தொல்காப்பியனார், “அகத்தெழு வளியிசை அரில்தப நாடி, அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே; அஃதிவண்துவலாது எழுந்து புறத்திசைக்கும், மெய்தெரி வளியிசை அளவு நுவன்றி.சினே" என்றே கூறினர். தொல்காப்பியர் கூறியதனையே அவிநயனாரும், குண வீரபண்டிதரும், புத்தமித்திரனாரும் கூறினர். இதனாலும் பிற்காலச் சமண முனிவர்களின் கருத்துத் தம் தமிழ்த் தொண்டு சமயத் தொண்டிற்குக் கருவியாதல் வேண்டும் என்பது தெளிவாகும். இதனையறிந்தே இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத தேசிகர், "மொழிக் காரணமாம் நாதகாரியவொலி எழுத்து" எனக் கூறினாராதல் வேண்டும்.

இனி, இவர்கள் செய்தருளிய இலக்கியங்கள் சிற்றிலக்கியம், பேரிலக்கியம் என இருவகைப்படும். இவற்றுள், சிற்றிலக்கியங்கள் பலவும் அந்தாதி, கலம்பகம் முதலாகப் பலதிறப்படும். அவை யாவும் சமயப் பொருள்களையும், சமண் சமயச் சான்றோர்களையும் புகழ்ந்து பாடும் சின்னூல்களாகும். திருக்கலம்பகம், திருநூற்றந்தாதி முதலியவை சமண் சமயத்தினர் பெரிதும் போற்றிப் படிக்கும் தீவிய செந்தமிழ் நூல்கள். நரிவிருத்தம் போலும் கதைச் செய்யுள் நூல்களும், மேருமந்தர புராணம், யசோதர காவியம் போல்வனவும் சமண் சமயப் பொருள்களையும் வரலாறுகளையும் விளக்கும் நற்றமிழ் நூல்கள்.

சிந்தாமணி முதலாகக் கூறப்படும் பெருங்காப்பியங்களும், சூளாமணி முதலாகக் கூறப்படும் சிறுகாப்பியங்களும் தமிழ் மொழிக்குப் பொதுவாக வைத்துக் கூறப்படுவன. சிறு காப்பியமைந்தனுள், மேலே காட்டிய யசோதர காவியமும் ஒன்றெனக் கூறப்படும்.

சிறுகாப்பியமைந்தும் தமிழ்மொழிக்குரிய பொதுக் காப்பியங்களாகக் கருதப்படும் செந்தமிழ் நலம் சிறந்தவையா