பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

செம்மொழிப் புதையல்


இவ்வாறு, தம் சமயப் பொருளை முற்ற விரித்துரைக்கும் பெருங்காப்பியம் பாடத் தொடங்கியவர், அதனைத் தமிழ் நாட்டவர் பெரிதும் விரும்பியேற்றுப் பேணத்தக்க விரகு அறிந்து அமைத்த அமைதி, அவரது தமிழ் மாண்புலமையினை நன்கு விளக்குகின்றது. மேலும், இவர் காட்டிய நெறியினை இவர்க்குப் பின் வந்தோர் கடைப்பிடித்திருப்பரேல், சமயப் பூசல்களும், பிற தீமைகளும் உளவாதற் கேதுவில்லையாகியிருக்கும்.

இதுகாறும் கூறியவாற்றால், சமணமுனிவர் சைன சமயத்துச் சான்றோர் என்பதும், அவர்கள் நம் தமிழ்நாட்டில் தம் சமய நெறியை உணர்த்தப் புகுந்தபோது, தமிழர், இப்பெரியார்கட்குப் பல ஆண்டுகள் முன்பே வந்த வடவர் கூட்டுறவால் தம் தமிழ்ச்சமய நெறி மறந்து, வடவர் சமயக் கொள்கையிலும், வடநூன் மரபுகளிலும் வேட்கையுற்றுத் தம் தமிழ் வளர்ச்சியைக் கருதாது நின்றனர் என்பதும், ஆயினும் சமண முனிவர்கள் தேவார காலம் வரையில் தமிழ்த் தொண்டு புரிதற்கண் ஊக்கங் கொள்ளாதிருந்தனர் என்பதும், பின்பு அக்காலத்து வாதங்களில் தோல்வியுற்றதன் பயனால், தமிழ்த் தொண்டு புரியது தொடங்கி, சின்னூல்களும் பெருநூல்களும் செய்தனர் என்பதும், இலக்கணங்களின் சில புதுநெறிக் கருத்துக்களைப் புகுத்தியும், தாம் செய்த நூல்களுள் வேண்டுமிடங்களில் தம் சமயக் கருத்துக்கள் நுழைத்தும் சமயத் தொண்டு விரித்தனர் என்பதும், அதுவே நம் தமிழுக்குப் பெருந் தொண்டாயிற்றென்பது பிறவுமாகும். இந்நெறியைக் கைப்பற்றிய பின் வந்த கிறிஸ்தவப் பெரியார்களும் தமிழ்த் தொண்டு புரிந்தனர். இக்காலத்து ஏனைச் சமயத்தவர்களும் இம்முறையை மேற்கொள்வார்களாயின், தங்கள் சமயநெறி வளம் பெறுவதோடு நம் தமிழ் மொழியும் சிறப்பெய்தும் என்பது உறுதி.