பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

செம்மொழிப் புதையல்


வாழ்ந்துவரும் இந்திய மகமதியர் அனைவரும், தம் சமயவுணர்வு நெகிழாது போற்றி வந்தனர். அதனால், அவர் தம் உள்ளம், அவரது சமயம் பிறந்த நாட்டையே நாடி நிற்பதாயிற்று, நாடோறும், அவர்கள் செய்யும் கடவுள் வழிபாட்டிலும், தொழுகையிலும் அவர்தம் முகம் அரபியநாட்டு மெக்காவையே நோக்கி நிற்கிறது; அவர்தம் மனப்பான்மை, ஒழுக்கமுறை, ஆட்சிமுறை, சமயக் கல்வி ஆகியயாவும் அரேபியா, சிரியா, பாரசீகம், எகிப்து என்ற இந்நாட்டு இயல்பினவாகவே இருக்கின்றன. இவர்களுடைய சமய மொழி, சமய சகாப்தம், இலக்கியம், ஆசிரியன்மார், அடிகண்மார், கோயில்கள் என்ற யாவும் ஒரே வகையாகவே இருக்கக் காண்கின்றோம். இவர்கள், இந்நிலவுலகில் எப்புறத்தில் வாழினும், இவையெல்லாம் ஒரு பெற்றியவாய் இருப்பது காணப்படுமே தவிர அவ்வந்நாட்டு எல்லைக்கு அகப்பட்டு, ஆங்கே அடங்கி ஒடுங்கியிருத்தலைக் காண்டல் அரிது.

இவர்தம் வருகைக்கும், இவர்கட்கு முன்போந்த ஏனையோர் வருகைக்கும் இருந்த வேறுபாடுகளுள் மேலே காட்டியது தலைசிறந்ததாகும். இதனோடு ஒப்பப் பிறிதொரு வேறுபாடும் உண்டு. நம் நாட்டிற்கு வந்த மகமதியர்கள், ஆயிரத்து இருநூறு முதல் ஆயிரத்து அறுநூறாம் ஆண்டுவரையில், அரசியல், சமூகவியல் என்ற எல்லாவற்றிலும், போர்த்திறமும் நாடோடிகளாய் நிலையின்றித் திரியும் திறமுமே நிரம்பக் கொண்டிருந்தனர். பாசறையிற் றங்கும் அரசர் தானைபோலவே, மகமதிய அரசியற் றலைவர்களும் ஆங்காங்கு இருந்துவந்தனர். ஒரு நிலையாய்த்தங்கி, நாடு நகரங்களைச் சீர்செய்து, அரசியலின் நிலைமையை நிறுவி, நாடுகாத்தல், தீயரை யொறுத்தல் ஆகிய செயல்களோடு சமூகத்துறையிலும் நலம் பல செய்யத் தொடங்கியது பிற்காலத்தில்தான் நிகழ்வதாயிற்று. கலப்பு மணம், சமயக்காய்ச்சலின்மை, ஒத்தவுரிமை முதலிய பல நன்மைகளும் பின்னரே உண்டாயின.

உயர்ந்தோர்களிடத்தில் ஒருகுறை உண்டாகுமாயின், அது விரைவில் உலகறியப் பரந்துவிடும். அவ்வண்ணமே, ஒருவன் செய்த குற்றம் உலகறியத் தோன்றி நிலைபெறுமாயின், அவன் பால் ஒருவகைச் சிறப்புண்டென்பது துணிந்துகொள்ளலாம். அம்முறையே, மகமதிய மன்னர்கள் காலத்துச் சிறுசெயல்கள் சில, இந்திய நாட்டு வரலாற்றுச் சிறு நூல்களுட் காணப் படுமாயின், அவற்றைக் கொண்டே, அவர்பால் அமைந்திருந்த-