பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/279

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

277


செலுத்திவிடும். பின்னர், தத்துவ ஞான நெறியிற் காணும் பொருள்கட்கு விஞ்ஞான நெறியில் விளக்கங் காணச் செலுத்தி உழல்விக்கும் விஞ்ஞானமும் தத்துவ ஞானமும் ஒருங்குடையராகிய சர். ஜேம்ஸ் ஜீன்ஸ் 1930-ஆம் ஆண்டில், தத்துவஞானப் பொருட்கு விஞ்ஞான விளக்கங் கூறத் தலைப்பட்டு முடிவில் “அற்புத பிரபஞ்சம்" (The Mysterious Universe) என்ற நூலை எழுதி முடித்தார்.

இப்பிரபஞ்சம் அற்புதமானது என்றதற்கு ஒரு விஞ்ஞானி வேண்டுமா? மக்கள் நாகரிகமின்றி விலங்கு போல் வாழ்ந்த காலத்தேயே இவ்வுலகம் அற்புதமானது என்பது அறியப்பட்டது. விஞ்ஞானத்தின் கருத்து பிரபஞ்சத்தின் அற்புதத் தன்மையை மாற்றி விளங்கவைப்பதாகும். அத்துறையில் முயன்று அஃது எவ்வளவோ விளக்கத்தைத் தந்திருக்கிறதன்றோ இந்நாளில் பள்ளியில் பயிலும் ஒரு மாணவன் தாமஸ் ஆக்வினாஸ், அரிஸ்தாத்தல், பிளேடோ முதலாயினோர் அறியாத உண்மை களை நன்கு அறிந்துள்ளான். அவர்கட்குப் பெருமயக்கத்தைத் தந்த உலக நிகழ்ச்சிகட்கு இக்கால விஞ்ஞானம் தெளிவுடைய விளக்கந் தந்துள்ளது. இங்ஙனமிருக்க, விஞ்ஞானிகள் இவ்வுலகம் அற்புதமான தென்பாராயின், அவர் கூற்று நன்கு சிந்திக்கத்தக்கதொன்றாம். சிந்தித்தவிடத்து உண்மை புலனாகிறது. தத்துவநெறியிற் காண்பனவற்றை விஞ்ஞானமாகக் கருதி அதற்கு விஞ்ஞான முறையில் விளக்கங் கூறப்புகுவதே அவர் செய்யும் தவறு. அதனால் அவர்கள் உலகம் அற்புதமானது என்று கூறவேண்டியவராயினர். தத்துவ ஞானக் காட்சிப் பொருள் விஞ்ஞானக் காட்சிக்கு அகப்படாமையின், விஞ்ஞானம் அதனைக் காண்டற்குத் துணை செய்யாதாயிற்று என்பதே அவர் கூறுவதன் கருத்தாகும். மேலும், விஞ்ஞான முறையிற் காணப்படும் கொள்கைகள் ஒரு நிலைமையனவல்ல. காலஞ்செல்லச் செல்லப் புதுக்காட்சிகளால் மாறுபடுவன. "குறைபாடு உள்ளதற்கன்றே வளர்ச்சியுண்டாவது" என்பர் திருக்கோவையாருக்கு உரைகண்ட பேராசிரியர். மேன்மேலும் வளர்ந்து சிறத்தலால் குறைபாடுடைய விஞ்ஞானம், ஒரு முடிவு கண்டு முற்றி நிற்கும் தத்துவஞானத்தோடு இயையாதாகலின் பிரபஞ்சத்தின் அற்புத நிலைமையை விளக்காதாயிற்று.

"வந்தவாறு எங்ஙனே போமாறேதோ, மாயமாம்பெரு வாழ்வு" என்றார் நம் நாவரசர். இதன் முதற்பகுதிக்கு உரைகூறுவோர்போல, மக்களுயிர் உலகிற்கு வந்தவாற்றைக்