பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. அறிவு


றிவாவது சொல்வாரது இயல்பு நோக்காது சொல்லப் பெறும் பொருளின் பயனோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வதாம். சொல்வார் தாம் உயர்ந்தோர், தாழ்ந்தோர், நட்டோர், பகைவர் எனப் பல்வகையினராதலோடு, முக்குண வயத்தராதலானும், இவருள் ஒவ்வொருவரிடத்து ஒவ்வொன்று ஒரோ வழிக் கேட்கப்படுதலானும். அவரது இயல்பு நோக்காமை வேண்டும் என்பது புலப்படும். அன்றியும், வேண்டப்படுவது பொருளேயன்றிப் பிறிதன்று. ஆகவே, “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் - மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்னும் தமிழ்மறை துணியப்பட்டது. படவே, சொல்வாரது இயல்பு நோக்கிப் பொருளின் பயன்காணாது ஒழிதல் அறியாமை என்பதும், அதனாலெய்தும் பயன் துன்பமே யென்பதும் பெறப்படுகின்றன. இவ்வுண்மை கீழ்க்காணும் பொருட்கதையில் விளங்குதல் காண்க.

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான்று எழுதரும் பருதியஞ் செல்வன் கீழ்க்கடல் முகட்டில் எழுமுன், வெள்ளி முளைப்ப விடியல் வந்தது; ஓதல் அந்தணர் பாடினர்; கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; இருஞ்சேற்றகன்வயல் முட்டாட்டாமரைத்துஞ்சி, வைகறைக் கட் கமழும் நெய்தலூதி, எற்படக் கண்போல் மலர்ந்த காமர்சுனை மலரை அஞ்சிறைவண்டின் அரிக்கண மொலித்தன. இவற்றினிடையே, முகையவிழ்ந்த முருக்கலரொன்றை வண்டினஞ் சூழ்வந்து முரலாநிற்ப, "ஐயகோ! ஐயகோ!!" எனும் அழுகுரலொன்று, அவ்வலர்க்கீழ் விளங்கிய அழகிய தளிரிடையெழுந்து, கேட்போர் செவிப்புலம்புக்கு, அவர் தம் மனத்திடை அருளூற்றெழச் செய்தது. இங்ஙனம், எவ்வுயிர்க்கும் இன்பக் காட்சி நல்கும் இளஞாயிறு தோன்றுங்காலைத் தோன்றிய துன்பக் காட்சி ஆண்டுற்ற உயிர்ப் பொருளனைத்தும் மருளச் செய்தது.