பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

செம்மொழிப் புதையல்


செல்லிடமாம் என்பது அதற்குத் துணிபாயிற்று. இவ்விடத்தைக் கேட்குந்தொறும் அப் பார்ப்புக்களும் தம் தாய்ப்பறவையை, அதனைக் குறித்த வினாக்கள் பல நிகழ்த்தாது ஒழிவதின்று.

நிற்க, இவ்விடம் யாதாக விருக்கலாம்? சிலர் இதனை நாம்யாண்டிருந்து போந்தோமோ ஆண்டையது என்பர். வேறு சிலர் நாம் இனிச் செல்லுமிடம் யாது அது வென்பர். சிலர், இத்தகைய இடமே இல்லை யென்பர். வேறு பலர் நாமும் பிறவும் நீங்கியதும், நீக்கமற இனிச் சேருவது மாய இடம் என்பர். இதுபற்றிக் கூறற்பாலன ஒருவாறு கோடற்பால வல்ல வென்பது காட்சி யொன்றையே அளவையாக் கொள்வார் துணிபு. மற்று, நாம் காண்டல், கருதல், உரை யென்னு மூன்றையும் அளவையாக் கொள்ளும் பான்மையே மாகலானும், அவற்றானாராயுங் காலத்து, உளத்திற் றோன்றும் சில வுணர்வுகளும், உணர்ந்தோர் பலர் கூறிய உரைகளும் அப்பெற்றித்தாய இடமொன்றுண்டென்பதனை வலியுறுத்துகின்றன. ஆயினும், அதனை ஒருவாறு நாம் காண்டற்குமுன் அறியாவுலகம் என வழங்குவோம். முதனூலாரும் இவ்வாறே வழங்குகின்றார். அன்றியும், இவ்வுலகைப் பற்றி, இருண்ட வுணர்வுகளே அப் பறவையின் உணர்வுட் கலந்து கிடந்தன.

இனி, அத் தாய்ப்புள், தானே தனித்தமர்ந்து, அவ்வுலகு பற்றிய வுணர்வுகள் தன் மனத்தெழுந்தோறும், இசைத்துக் குளிர்ந்து நாவில் ஊறாத அமிழ்தூற. உடல் புளகித்து உள்ளமெல்லாம் உருகிக் களிக்கும். இக் களியாட்டினைப் பின்னர் அது, தன் பார்ப்புக்கள் காணவும் கேட்கவும் செய்தயர்தல் தொடங்கிற்று. இங்ஙனம் செய்தற்குக் காரணம் யாதாகும்? அப் பார்ப்புக்களும் இதனைத் தொடர்வனவல்லவோ? அவற்றிற்கும் அவ்வுலக வுணர்வினை யுணர்த்தல் வேண்டுமன்றோ? அது போலும் காரணம்!

இவ் வண்ணம் நாட்கள் சில சென்றன. ஒருநாள் அக் குஞ்சுகளு ளொன்று, ஆய்முகநோக்கி, அவ் வுலகு யாண்டுள தென்று கேட்ப, அது, “அவ்வுலகம் உண்டென்பது உண்மை: மற்று, யான் அஃது உறுமிடம் அறியேன். ஆகலின்,


“I may call it the Unknown Land."