பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

செயலும் செயல் திறனும்



இல்லை. அறிவியலில் ஓர் உண்மை உண்டு. ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்ச் செயல் உண்டு என்பதை நாம் எப்பொழுதும் எந்த நிலையிலும் மறந்துவிடக் கூடாது. உலகமும் அதிலுள்ள அனைத்து ஆற்றல்களும் நேர் ஆற்றல் - எதிராற்றல் என்ற அளவிலேயே இயங்குகின்றன என்று நாம் முன்பே அறிந்திருக்கிறோம். அந்த உண்மை எல்லாச் செயல்களுக்குமே பொதுவானது.

3. உடலும், உள்ளமும்

எனவே ஒரு செயலைச் செய்யத் தொடங்கியவுடன் அதற்கு ஏற்படும் தடைகளைப் பார்த்து நம் உள்ளம் சோர்ந்துவிடும். துவண்டுவிடும். வருத்தம் கொண்டுவிடும். பின்னர் படிப்படியாக இந்தச் செயலே வேண்டாம் என்று அமைந்துவிடும். ஆனால், அவ்வாறு சோர்ந்துவிடாமல் துவண்டு விடாமல், வருத்தம் கொள்ளாமல், அமைந்துவிடாமல், மேலும் மேலும் அந்தச் செயலை செய்வதில் ஆர்வமும் முனைப்பும் கொண்டு ஈடுபடுதல் வேண்டும் அதையே உறுதி ஊக்கம் என்னும் சொற்கள் குறிக்கின்றன.

இந்த இரண்டு சொற்களும் நம்முடைய இரண்டு வகையான தன்மைகளைக் குறிக்கின்றன. உறுதி என்பது உடலுணர்வுத் தன்மையையும், ஊக்கம் என்பது உள்ள உணர்வுத் தன்மையையும் குறிக்கும். அவ்வாறு குறித்தாலும் உடலில் உள்ளமும் உள்ளத்தோடு உடலும் பொருந்தியிருப்பதால், பொதுவாக இரண்டின் தன்மைகளையுமே இவ்விரண்டு சொற்களும் குறிக்கக் கூடியன. அவ்வாறு ஒன்றுக்கே உரிய சொல்லை இன்னொன்றுக்குக் குறிக்கும் பொழுது, அதனதன் இயல்பான தன்மைகள் இன்னும் மிகுந்து தோன்றும்படியான உணர்வுகளை அவை உணர்த்துவதை அறிந்து மகிழலாம்.

அஃதாவது 'உடல் உறுதியாக இருக்கிறது' என்கிற பொழுது இயல்பான நிலையில் உடல் நலமாக இருப்பதை அஃது உணர்த்தும். ஆனால் 'உடல் ஊக்கமாக இருக்கிறது' என்கிறபொழுது அது நலமாக மட்டுமின்றி அச்செயல் செய்யும் கிளர்ச்சியுடனும் இருக்கிறது என்பதை அஃது உணர்த்தும். அதேபோல், 'உள்ளம் ஊக்கமாக இருக்கிறது' என்கிற பொழுது, இயல்பான நிலையில் அது செயல் செய்யும் விருப்பத்தில் - ஆர்வத்தில் அஃது இருக்கிறது என்பதை உணர்த்தும். 'உள்ளம் உறுதியாக இருக்கிறது' என்னும் பொழுது, 'அச்செயல் செயல் முடிக்கும் வரை அந்த விருப்பம் தளராமல் இருக்கும்' என்பதை அஃது உணர்த்தும். தமிழில்தான் இத்தகைய நுண்பொருளை உணர்த்தும் சொற்களை நாம் பார்க்க முடியும்.

ஆகவே, நாம் எந்தச் செயலைச் செய்வதற்கு முற்பட்டாலும், அந்தச் செயல் முடியும்வரை, அதனால் வரும் எவ்வகை இடர் பாடுகளையும்,