பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

செயலும் செயல் திறனும்



தேர்ந்தெடுக்கும்பொழுது, அவன் அன்பும், அறிவும், மனம் கலங்காத உறுதியும், பொருளாசை இன்மையும் உடையவனாக இருக்கின்றானா என்று பார்க்க வேண்டும் என்பது குறள்.

இனி, திருக்குறளில் இன்னொரு சிறந்த குறிப்பும் உள்ளது. அதைப்பற்றி நாம் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்ள வேண்டும்.

5. அறிவு, உள்ளம், உடல்

மக்களுக்கு உறுதியாக இருக்க வேண்டியவை மூன்று. அறிவு, உள்ளம், உடல். இந்த மூன்று பொருள்களும் உறுதியாக இருந்தால்தான், இந்த உலக வாழ்க்கை மிக நிறைவாகவும், சிறப்பாகவும் நடைபெறும். அறிவுஉறுதி என்பது, ஒரு செயலையோ பொருளையோ பற்றித் தெரிந்திருக்கின்ற அறிவு, அதில் ஈடுபாடு கொண்ட பின் தவறாகவோ நெகிழ்ச்சி அடைந்தோ போகுமானால், அந்த அறிவால் பயனில்லை. அஃது உறுதியற்ற அறிவாகும். நாம் தெரிந்த அறிவுநிலை இறுதிவரை சரியானதாகவே இருந்தால்தான் அஃது உறுதியான அறிவு ஆகும். அதேபோல் நம் உடலும் ஒரு செயலைத் தொடங்கும் பொழுது இருப்பதுபோல், அச்செயல் முடிவடையும்வரை உறுதியோடு இருத்தல் வேண்டும். அதுவே உடலுறுதி. இனி, இரண்டிற்கும் மேலாக உள்ளம் உறுதியுடன் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அறிவுறுதியும் குலையாதிருக்கும். உடலுறுதி குறைந்தாலும் சரி செய்து கொள்ளலாம். உள்ள உறுதியிழந்து போனால், அறிவும், உடலும் உறுதியாக இருந்தும் பயனில்லை. படிப்படியாக அவையும் உறுதி குலைந்து போகும். உள்ளம் உறுதியாக இருப்பின், அறிவும் உடலும் தொடக்கத்தில் உறுதியற்றிருந்தாலும் கூட படிப்படியாக அவை உறுதிபெற்று விடமுடியும். எனவே உறுதி என்னும் உணர்வுக்கே உள்ளந் தான் நிலைக்களன் ஆகும். ஆகையால், உறுதி என்பதற்கு உள்ளம் என்றே பெயர் கொடுத்து விடுவார் திருவள்ளுவர்.

உள்ளம் உடைமை உடைமை (592) - உறுதி,
உள்ளத்து அனையது உயர்வு (595), உறுதி - ஊக்கம்.
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை (600) உறுதி - ஊக்கம்.
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை (97)- உறுதி,
உரன் நசைஇ, உள்ளம் துணையாக (1263) - உறுதி.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ (798) - உறுதி.

ஒருவனுக்குச் செல்வம் என்பது வேறு இல்லை. உள்ளத்தின் உறுதியே செல்வம் ஆகும். மற்றபடி பொருளைச் செல்வம் என்பதெல்லாம் சரியன்று. உள்ள உறுதி இருந்தால் எவ்வளவு பொருளையும் திரட்டிவிட முடியும். உள்ள உறுதியில்லாமல் பொருள் மட்டும் இருந்து பயனென்ன? பொருள் ஒரு சமயத்தில் ஒரேயடியாகப்