பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

செயலும் செயல் திறனும்



7. செயலுறுதி

மன உறுதி உள்ளவன், ஒருபொழுதும் தான் மேற்கொண்ட செயலை, அது தொல்லை கொண்டது, இழப்புத் தருவது, கடினமுடையது. பல இடர்ப்பாடுகளை அடுக்கடுக்காகத் தருவது என்பன போன்ற காரணங்களுக்காகக் கைவிட மாட்டான். செயலுக்கே உள்ள உறுதிதான் அடிப்படை மற்றனவாகிய செயலுக்குரிய பொருள்,துணை, கருவிகள், இடம், காலம் எல்லாம் மனவுறுதிக்குப் பின்னால் வைத்து எண்ணத் தக்கவைதாம். இத்தகைய துணைப் பொருள்கள் இல்லை என்றாலும் மனவுறுதி இருந்தால் அவற்றை ஒவ்வொன்றாகப் படிப்படியாகத் தேடிக்கொள்ள முடியும். ஆனால் மன உறுதியை யாரும் புறத்தே இருந்து தேடிக் கொள்ள முடியாது. அஃது அகத்தேயே பிறவி முதல் இருப்பது உயிருடன் கலந்தே ஒருவன் அதைப் பெறுகிறான். வினைக்குத் தேவையான பிறபொருள்கள் உலகியல் பொருள்கள். ஆனால் மனவுறுதி உயிரியல் கூறு. எனவே தனக்கு இயல்பாகவே வந்து வாய்த்த இயற்கை உணர்வான உள்ள உறுதியை உலகில் முயற்சி செய்தால் கிடைக்கக்கூடிய பிற துணைப் பொருள்களுக்காக இழந்துவிடக் கூடாது என்பார் திருவள்ளுவப் பேராசான்.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

(661)

எனவே வினைத்திட்பத்திற்கே, அஃதாவது உறுதியான செயலுக்கே அவனிடமுள்ள மனவுறுதியே காரணமாக அமைகிறது. ஆகையால் மனவுறுதியே (திட்பமே) வினை உறுதி (வினைத்திட்பம்). வினை உறுதியையே எல்லாரும் போற்றுவர். வரவேற்பர்; புகழுவர்; அதற்குத் துணை நிற்பர். வினை உறுதியே இல்லாதவனை எவரும் பாராட்ட மாட்டார்கள். விரும்ப மாட்டார்கள்; வெறுத்து ஒதுக்கி விடுவார்கள். அவனிடம் வேறு உறுதிப்பாடுகள் இருக்கலாம். அஃதாவது பொருள் இருக்கலாம் அறிவு இருக்கலாம். ஆள்துணை இருக்கலாம். கருவி முதலிய உலக உறுதிப் பொருள்கள் இருக்கலாம். ஆனால் உலகம் ஒருவனிடம் எதிர்பார்ப்பன இவையன்று. அவனின் உள்ள உறுதியையே! அவ்வுள்ள உறுதி இல்லாத பொழுது அவனைப் பயனற்றவனாகவே உலகம் கருதும், அவனின் பிற சிறப்பியல்களை அது விரும்புவதில்லை என்பார் திருவள்ளுவர்

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.

(470)

இந்த வினைத்திட்பம் என்பதே மனத்திட்பம்தானே! எனவே வினைத்திட்பம் செயல் உறுதி, செயல்திறன் எல்லாமும் மனத்திட்பத்தைப் பொறுத்தே அமைந்திருக்கும் என்க.