பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

செயலும் செயல் திறனும்



இனி நம் உடலை நன்றாக அஃதாவது அதற்குண்டான இயல்பான, தன்மையைக் கெட்டுப் போகாமல் வைத்திருக்க வேண்டுமானால், உடல் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அஃதாவது உடலை ஏதாவதொரு செயலில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும், உடலில் உள்ள புறக் கருவிகளும், அகக் கருவிகளும் நன்றாக, முழுமையாகச் செயலில் ஈடுபடுத்தப் பெற்று. நன்கு களைப்படையும்படி செய்ய வேண்டும். அப்பொழுதுதான், அவை தங்களுக்குக் கொடுக்கப்பெறும், உயிர்ப்பாற்றல்களை நன்றாக உள் வாங்கிக்கொள்ளும், நிலம் நன்றாகக் காய்ந்தால்தான் ஆண்ணிரை உள்ளிழுத்துக் கொள்ளும், நமக்கு நன்றாகப் பசித்தால்தான் உணவை நாம் உண்ண முடியும். பசிக்காமல் உண்ண முடியாது. பசி என்பது நம் உடல் உறுப்புகள் இயங்கிக் களைத்துப் போய்விட்டன என்பதை அறிவிக்கும் ஒர் உணர்வு. அவற்றுக்கு மீண்டும் (அஃதாவது உணவு) தேவை என்று அறிவிக்கும் ஓர் எச்சரிக்கை அறிவிப்பு.

முதலில் உடலியக்கத்துக்காக கொடுக்கப் பெற்ற ஆற்றல், (உணவு) முழுவதும் தீர்ந்துவிட்டது; மீண்டும் ஆற்றல் (உணவு) தேவை என்பதை உணர்த்துவதே பசி, இந்தப் பசி ஏற்பட, உடல் முன் கொடுக்கப்பட்ட உணவாற்றலை முழுவதும் உழைப்பால் செலவிட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் உணவாற்றலை அதற்குக் கொடுக்க முடியும். இல்லெனில் முன் கொடுக்கப்பட்ட ஆற்றலை அது (உடல்) வீணாக செலவிடாமல் வைத்துக் கொள்ளும். உணவாற்றலை உடல் வெளிவிடாமல் சேமிக்கப்படுகையில் அது கொழுப்பாக மாற்றப்படும். இந்தச் சேமிப்பு மிக மிக, உடல் தன் இயக்கத்தில் தடுமாறிப் போகிறது; செயல் குன்றிப் போகிறது. ஒருவன் சுமையை எடுத்துக் கொண்டு வேகமாகவும், தடையில்லாமலும் நடக்கவோ, ஓடவோ முடியாதது போல், உடலானது, தான் உண்ட உணவாற்றலைச் செயல் செய்து செலவிடாமல், கொழுப்பாக மாற்றிச் சேமித்து வைத்துக் கொள்ளுமானால், உடலின் சுமை கூடிவிடும்; அஃதாவது உடலின் எடை மிகுந்துவிடும் உடலின் எடையாகிய சுமை கூடிவிடவே அதனால் இயங்குவதற்குத் தடை உண்டாகும். உடல் சுமையாகிய கொழுப்பை உடலில் சேமித்துக் கொண்டவர்கள் சரியாக நடக்க முடியாது செயல் செய்ய முடியாது; இயங்கவே முடியாது. உடல் மீண்டும் இயங்கினால்தான் சேமிக்கப்பெற்ற கொழுப்பு, இயக்கச் சூட்டினால் உருகி மீண்டும் ஆற்றலாக மாறி, உடல் மேலும் மேலும் இயங்குவதற்கு இடந்தரும்.

எனவே உடல் இயங்குதிறன் பெறுதற்கு அஃது இயங்க வேண்டும். மீண்டும் இயங்குவதற்கு அஃது இயங்கு திறன் பெற வேண்டும். இவ்வாறாக மாறி மாறி இயங்கவும் இயங்குதிறன் பெறவும் இயங்குதிறன்