பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

179



உணர்வுகள் இருந்தால்தான் ஒரு பொருளோ, நிலையோ, நிகழ்ச்சியோ மதிக்கப்படும்; வரவேற்கப்படும். எதிர்பார்ப்புதான் வரவேற்பை உருவாக்கும். அப்பொழுதுதான் அவ்வரவால் மகிழ்வு இருக்கும். இல்லையானால் இயல்பான நிகழ்வாக அஃது ஆகிவிடும். இயல்பாக இருப்பதற்குப் பெருமை இராது; அதனால் சுவையும் இராது; சுவையில்லையானால் வாழ்க்கையே இல்லை. துய்ப்புதான் வாழ்க்கை. துய்ப்பு என்பது இரண்டு எதிர் நிலைகளையும் உணர்ந்த நிலையில் ஏற்படுவது, காரத்தையும், புளிப்பையும், கசப்பையும் உணரவில்லை யானால், உவர்ப்பையும்,துவர்ப்பையும், இனிப்பையும் உணர முடியாது. எனவே இரு கூறுகளும் கலந்த வாழ்க்கையில் இரு கூறுகளையும் நாம் துய்க்கவில்லையானால், துய்ப்பு என்பதற்கே பொருளில்லை என்பதை உறுதியாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, செயலில் தோல்வி, இழப்பு, ஏமாற்றம், எதிர்பார்த்தது கிடைக்காமை என்பவை பற்றியெல்லாம் கருதி ஊக்கத்தை இழப்பதோ, செயலைத் துறப்பதோ, இடிந்துபோவதோ, செய்த அல்லது அறிந்த செயலை விட்டுவிட்டு வேறொரு செயலைக் கைப்பற்றுவதோ கூடாது; தேவையில்லாதது என்பதைத் தெளிவாக உணர்தல் வேண்டும்.