பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

213



தட்டுக் கெட்டுத் தடுமாறாமல், இது மனத்திற்கு ஊட்டமளிக்கும் உணர்வாகவும், மனச்சோர்வு அகற்றும் மருந்தாகவும் செயலில் ஈடுபட்ட ஒருவர்க்கு உதவுகிறது.

9. உண்மையான நட்புணர்வு : செயலில் திறமையாக ஈடுபட விரும்புவார் உண்மையான நட்புணர்வு கொண்டவராகவே இருப்பார். போலிகளைத் தவிர்க்கவும், மெய்யான நண்பர்களைத் தமக்குத் துணையாக ஏற்கவும் இவ்வுணர்வு அவர்க்குப் பாதுகாப்பாக நின்றுதவும்.

10. மெய்யான அன்புடைமை : அன்பு மெய்யாக இல்லையானால் அஃது உண்மையான பயன் தருவதில்லை. போலியான அன்பு போலி விளைவுகளையே உண்டாக்கும்.

11. முன்கோபம் : கோபம் - கடுஞ்சினம் முன்கோபம் சில நொடிப்பொழுதே வந்து தோன்றி இருந்து மறைவது, இஃது நன்னெறியாளர்களுக்கு ஒரு காப்புணர்வாகத் தோன்றுகிறது. இவ்வுணர்வு இல்லையானால் பிறர் இழுத்த இழுப்புக்கு ஒருவர் ஆட்பட்டுச் சூழலை வென்றெடுக்கவும் தவிர்க்கவும், மீளவும் முடியாமல் போகும். இது திறமையானவர்களுக்கும் நல்லவர்களுக்கும் இயற்கை தரும் ஒரு தற்காப்புக் கருவியாகப் பயன்படுகிறது.

12. மன்னிக்கும் உணர்வு : கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர் என்றார் அறப் பேராசிரியர். ஒருவர் ஒரு செயலுக்குத் தடையாக இருப்பதைச் சுட்டவும் கண்டிக்கவும் பின் அவர் அத்தவற்றை உணர்த்து திருந்திய விடத்து அவரைப் பொறுத்துக் கொள்ளவும் உதவும் உணர்வு, இது. திருந்தியவர் மீண்டும் செயலுக்கு நல்ல துணையாக உதவும் நிலையில் வளர்ந்து நிற்பதால், அவரை மன்னிக்கும் மனப்பாங்கு ஒரு செயல்திறம் உடையவர்க்குக் கட்டாயம் தேவையாகிறது.

13. கலையார்வம் : கலையார்வம் இல்லையானால் ஒரு செயலைச் செப்பமாகவும் திறமையாகவும் தூய்மையாகவும் பிறரைக் கவரும் வகையில் சிறப்பாகவும் செய்ய இயலாது. மேலும் இக் கலையார்வமே ஒரு செயலுக்கு இடையில் வரும் மனச் சோர்வைப் போக்கி, மேலும் மேலும் அவரை அசசெயலில் இன்னும் சிறப்பாக ஈடுபட ஊக்கி உதவுகிறது. வெறும் தொழிலறிவு வறட்சியானது. அதைச் செழுமையுடடையதாக்கி வளமை தர இவ்வுணர்வு மிகவும் தேவையாகிறது. எனவே, செயலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு இவ்வுணர்வு இருக்கிறதா என்று பார்த்தல் வேண்டும்.