பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

செயலும் செயல் திறனும்


நன்மை வருவதில் கொஞ்சம் தீமையும் வரலாம். நல்லதும் தீதும், இன்பமும் துன்பமும், உயர்ச்சியும் தாழ்ச்சியும், ஒளியும் இருளும் சேர்ந்தனதாம் உலகமும் அதன் இயக்கமும். எனவே நன்மையே அல்லது இன்பமே ஒரு வினையான் வரும் என்று எண்ணிவிடக்கூடாது. இன்பம் துன்பம், நன்மை தீமை இரண்டுமே ஒரு வினையால் வரும். இவற்றுள் எது மிகுதி எது குறைவு என்று எண்ணி நலம் மிகுதியாக வருவதைப் பார்த்துத்தான் நாம் வினைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையால் ஆளப்படும்

(5)

என்பது குறள்.

ஒரு வினையில் தொடக்கம், இடை, முடிவு என்று உண்டு. தொடக்கத்தில் ஒரு வினை கடினமாகவும் செலவுடைய தாகவும்துன்பம் தருவதாகவும் இருக்கலாம். ஆனால் இந்நிலை இடையில் நீங்கி, முடிவில் எளிதாகவும், வருவாயுடையதாகவும் இன்பம் தருவதாகவும் இருக்கும். இந்நிலைகளை யெல்லாம் ஆராய்ந்து தேர்தல் வேண்டும் தொடக்கத்தில் துன்பமாக உள்ளதென்பதற்காகவே ஒரு வினையைத் தொடங்காமல் விட்டுவிடக் கூடாது. அல்லது தொடக்கத்தில் இன்பமாக உள்ளதென்பதற்காகவே ஒரு வினையைத் தொடங்கி விடவும் கூடது. நாம் ஆராய்வதில் ஒரு வினையின் முடிவையே, இறுதிப் பயனையே ஆராய வேண்டும். முடிவான பயன் தொடக்கத்தையும் இடைநிலைகளையும் விட நல்லதாக இருக்கிறதா என்றே பார்த்தல் வேண்டும்.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்

(676)

என்னும் குறளை ஓர்க.