பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

49



களாகையால், அவர்கள் அத்தகைய உள்முகக் கரணியங்களை வெளியே புலப்படுத்திக் காட்டாதவாறு, வேறு பலரும் அவர்களின் எதிர்ப்பை ஒப்புகின்ற வகையில் எல்லார்க்கும் வெளிப்படையாகத் தெரிந்த, நம் குணநலன்கள், அறிவு முனைப்புகள், செயல் ஊக்கங்கள் இவற்றைப் பிறரிடம் பிறழக் காட்டிக் குற்றஞ்சாட்டி, எதிர்ப்புகளை உருவாக்குகின்றனர். அவ்வெதிர்ப்புக் கருத்துகளுக்குத் துணை சேர்த்து, அவற்றுக்கு வலிமை சேர்க்கின்றனர். இத்தகைய வலிவான எதிர்ப்பு ஒரு வினைக்கு ஏற்படுவதால், அவ்வினை தடைப்பட்டுப் போகாமல், அதைச் செய்கிறவன், அவ்வெதிர்ப்புகளை முறியடிக்கத் தன் அறிவு, மனம், செயல் முறைகளை மேலும் வலிவாக்கிக் கொள்ளும் வழிவகைகளைச் செய்து கொள்ளுதல் வேண்டும். மனச் சோர்வு அடைந்துவிடக் கூடாது. மேலும் அறிவு முனைப்புக் காட்டுதல் வேண்டும். தான் செய்யும் செயலை மேலும் வலிமையாக்க என்னென்ன முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்பதை ஆய்ந்தறிதல் வேண்டும். எதிர்க்கின்றவர்களின் அறிவு, மனம், செயல்வலிமை, கருவிகளை உணர்ந்து, அவை செயற்படும் வகைகளைக் கண்டறிந்து, அவற்றினும் கூடுதலான வலிமையுடன் தன் செயலைச் செய்து கொண்டு போதல் வேண்டும். அப்பொழுதுதான் இவன் செய்யும் செயல்கள் செவ்வனே நடைபெறும். செயல்களுக்கு ஏற்படும் மாந்த எதிர்ப்புகளால் ஒருவன் செய்கின்ற செயல்கள் தூய்மையுறும். செப்பமடையும். வலிவு பெறும் என்று ஒருவன் கருதிக்கொள்ளுதல் வேண்டும். மேலும் ஒரு செயலுக்கு ஏற்படும் எதிர்ப்புகள் அச்செயலுக்கு ஒருவகையில் கிடைத்த விளம்பரங்கள் என்றும் எண்ணுதல் வேண்டும். எதிர்ப்பாளர்களின் கருத்துகளுக்கும் செயல்களுக்கும் நாளடைவில் பிற வேறு எதிர்ப்புகள் ஏற்படும் பொழுது, அப்பிற வேறு எதிர்ப்புகள், முன் தொடங்கப்பெற்ற மூலச் செயலுக்கு நல்ல துணைகளாக அமைவதும், இயற்கை தரும் ஒரு வெற்றிப் பரிசாகும்.