பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10. துணை வலிமை அறிதல்

1. முதலில் எண்ண வேண்டுவது

தான் செய்யப் புகுகின்ற வினைக்கு எதிரானவர்களின் அறிவு, மனம், செயல் இவற்றால் வரும் எதிர்ப்புகளை நன்றாக உய்த்துணர்ந்து அறிந்த ஒருவன் மனச் சோர்வுறாது தன் வினைகளில் மேன்மேலும் ஊக்கமாக உழைத்தல் வேண்டும் என்பது பற்றி முன்னர் ஒருவாறு தெரிந்து கொண்டோம். இக்கட்டுரையில், வினைக்கு வரும் எதிர்ப்புகளைப் போல் அதற்கு வரும் துணை நிலைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

வலியறிதல் என்னும் அதிகாரத்துள், அறிய வேண்டிய வலிமைகளை நான்காகப் பகுத்த திருவள்ளுவப் பேராசான் துணை வலிமையை இறுதியில்தான் எண்ணிப் பார்த்தல் வேண்டும் என்று கூறுவார். வினை வலிமை, தன் வலிமை, மாற்றான் வலிமை இவற்றையே முறையாக முன்னர் எண்ணுதல் வேண்டும் என்னும் கருத்துள் பல உலகியல் அறிவு நிலைகள் பொதிந்துள்ளன. கூர்மையாகப் பார்ப்பார்க்கு இவை தெரியவரும். சிலர் தனக்கிருக்கும் வலிமையையே முதலாவதாகக் கருதிக் கொண்டு, அதைச் செய்ய என்னால் முடியும் என்று அளவிறந்த முனைப்புக் காட்டி ஈடுபடுவர். அது தவறு என்பது குறள் கொள்கை. முதலில் கவனிக்கப்பட வேண்டுவது, ஒரு வினையைப் பற்றிய தன்மைகளையே. அது பற்றிய அறிவு, உழைப்பு அழுத்தம், செயல் திறன் ஆகியவையே முதற்கண்டு அறியப் பெறவேண்டியவை.

2. அறிவும் அறியாமையும்

பொதுவாக நமக்கு எந்த வேலையும் செய்யத் தெரியும் என்னும் தவறான மனப்போங்கு ஒன்று உண்டு. அது தவறான சூழலால் எழுந்த அறியாமை முனைப்பாகும். அறிவு நிலையில் முதலில் கவனிக்கப்பட வேண்டியது அறியாமையே. நமக்கு என்னென்ன தெரியும் என்று எண்ணிக் கொண்டிருப்பதைவிட, என்னென்ன தெரியாதன என்று எண்ணிப் பார்ப்பதே அறிவுடைமையாகும். அறியாமையை அறிவதுதானே அறிவு. 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்' என்பார் திருவள்ளுவப் பெருந்தகை (குறள் 110). இக்கருத்து சொல்லப் பெறும் இடமும் மிக நுட்பமானது. அதைக் காலத்தால் அறிந்து கொள்ளுக.