பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

53



5. எல்லாருமே துணைக்கு வரமுடியுமா?

இனி, தன் வலியும் மாற்றான் வலியும் அடுத்தடுத்து எண்ணப் பெற வேண்டியவை என்று கண்டோம். இவ்வரிசையில் எண்ணப் பெறும் இறுதி நிலையே துணைவலி என்பது திருவள்ளுவர் கருத்து. சிலர் தமக்கிருக்கும் நண்பர்கள் கூட்டத்தையே பெரிதாக முன் நினைந்து உடனே ஒரு தொழிலில் ஈடுபட்டுவிடுவர். இது தவறு என்று கடிகிறார் திருவள்ளுவர். உலகில் உள்ளவர்கள் அனைவருமே நண்பர்களாக அமைந்தாலும் அவர்களைக் கொண்டு ஒரு செயலைத் தொடங்கி வெற்றி கண்டுவிட முடியாது. அவர்களின் வலிமை நான்காம் தரத்தினதே என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருமே தம் தம் வழியில் வாழ முற்படுவார்கள் இல்லையா? எனவே அவர்கள் எல்லாரும் நமக்குத் துணைவருவார்கள் என்பதை எண்ண முடியுமா ? அவரவர்கள் செயலைக் கவனிக்கவே அவரவர்களுக்குச் சரியாக இருக்கும் என்பதுடன், இனி அவரவர்களுக்கென்று தனித்தனியாகச் சுற்றமும் உற்றமும் உண்டு. நண்பர்கள் இருவரும் இளமைப் பருவத்தில் தங்களைத் தாங்களே அறிந்தவர்களாகையாலும், பொருளிட்டும் முயற்சி அக்கால் தலையெடுக்காதிருக்குமாகையாலும், அவர் தம்மை வந்து சூழும் குடும்பச் சுமைபற்றி அவர்கள் அக்கால் உணரார் ஆகையாலும் ஒருவர் பணிக்கு ஒருவர் துணை நிற்பதாயும் தோள் கொடுப்பதாயும் மிக்க ஆரவாரமாய் அக்கால் பேசிக் கொள்ளலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல ஒருவரினும் ஒருவர் திருமண அமைப்பு, பொருள்நிலை, அறிவுநிலை, செயல்நிலை இவற்றால் சிறந்து விளங்க விளங்க, மற்றவர்க்குப் பொறாமையும், காழ்ப்பும், கெடு நினைவும், இகலும், பகையும் வந்து மனத்தை இருளாக்கி விடுகின்றன. அக்கால், அவர்கள் தங்கள் ஒருவர்க்குள் ஒருவர் துணையாகி நில்லார். பகையாகி நிற்பர். வெளிப்படப் பகையென்றில்லையானாலும், மனத்துள்ளேனும் மேற்கூறிய தீயுணர்வுகள் வந்து அலைமோதிக் கொண்டிருக்கும். அதனால்தான் துணைவலிமையை இறுதியில் வைத்து நாலாம்படியாக வைத்துப் பேசுவர் திருவள்ளுவர் பெருமான்.

6. நண்பர்களின் தன்மை

இனி, ஒரு வினைக்குத் துணையாக வந்து வாய்ப்பவர்கள் அல்லது நண்பர்கள் - அனைவருமே நல்லவர்களாக இருந்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. நண்பர்கள் என்போர் எப்பொழுதுமே அல்லது பெரும்பாலும் இடையில் வந்தவர்களாகவே தாம் இருப்பர். பிள்ளைப் பருவந்தொட்டு, இறுதிக் காலம் வரையில் நண்பர்களாக அமையும் வாய்ப்பு, இலக்கம் பேர்களில் ஒருவர்க்குக் கூட வாய்ப்பது அருமை. எனவே, பெரும்பாலானவர்கள் பலவேறு சூழல்களில், பலவேறு